(ரக்ஸனா)பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தினை இரத்துச் செய்யுமாறு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிரதி (விரிவாக்கல்) விவசாயப்பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தினை இரத்துச் செய்யுமாறு கோரி புதன்கிழமை(27.12.2023) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவ்அலுவலகத்திற்கு முன்னால் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு பிரதி (விரிவாக்கல்) விவசாயப்பணிப்பாளராக முன்னர் கடமையாற்றிய மு.பரமேஸ்வரன் மீண்டும் மட்டக்களப்பில் கடமை ஏற்பதை எதிர்க்கிறோம். என்ற தலைப்பிட்ட பதாதையை தாங்கியவாறு விவசாயிகள் கவனஈர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது தற்போது கடமையிலுள்ள பிரதி விவசாயப்பணிப்பாளரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கவனஈர்ப்பின் இறுதியில் கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு வழங்குவதற்கான கடிதம் ஒன்றைiயும் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் கையளித்தனர்.
ஏற்கனவே கடமையாற்றி வரும் பிரதி விவசாயப் பணிப்பாளர் மேற்கொண்ட திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும், அதனால் தங்களது விவசாயங்கள் பாதிப்படையும், எனவும், புதிதாக நியமனம் வழங்கப்பட்டவர் முன்னர் கடமையாற்றி பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இடமாற்றம் வழங்கப்பட்டவர், விவசாயம் பாதிக்கப்படும் நிலை உருவானால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.