( வாஸ் கூஞ்ஞ)
கிறிஸ்துவின் பிறப்பு விழா பிறப்பு விழா மட்டுமல்ல மற்றவர்களை அன்பு செய்யும் விழாவாகவும் மற்றவர்களை புரிந்து கொள்ளும் விழாவாகவும் இருக்கின்றது என ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசாலை பங்குத் தந்தை அருட்பணி எஸ்.அன்ரன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
கிறிஸ்மஸ் பெருவிழா அன்று (25) பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயதத்pல் இரவு பெருவிழா திருப்பலியை ஒப்புக் கொடுத்தபொது அவர் தனது மறையுரையில் தொடர்ந்து தெரிவிக்கையில்;
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இந்த உலகம் இந்த மெசியாவுக்காக நீண்ட காலமாக காத்துக் கொண்டிருந்தது.
இந்த மெசியா இவ்வுலகத்துக்கு வந்து பாவத்தில் மூழ்கியுள்ள மனித குலத்தை காப்பாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அகுஸ்துஸ் சீசர் என்ற அரசன் முடிசூட்டப்பட்டபின் தனது நாட்டில் வரி அறவீடு செய்யும் நோக்குடன் எல்லோரையும் கணக்கீடு செய்யப்பட வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இதனால்தான் புனித சூசையப்பர் கர்ப்பிணியான தேவ அன்னையையும் யூதேயாவிலிருந்து பெத்லேமுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே கிறிஸ்து ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.
ஓடுக்கப்பட்ட மந்தை மேய்ப்பர்களுக்கே கிறிஸ்து பிறப்பு முதலில் அறிவிக்கப்பட்டது. தாழ்ச்சியின் அடையாளமாகவே இது இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விழா முதலில் கடவுள் மனித உருவெடுத்த விழாவாக அமைந்துள்ளது. ஒரு மனிதன் தனது ஒழுக்கத்திலிருந்து தவறியுள்ளமையால் எம்மில் இறைவன் அளவு கடந்த அன்பு வைத்தமையால் எம்மை மீட்டு எடுப்பதற்காகவே மனுவுறு எடுத்து பிறந்துள்ளார்.
இதுவே இந்த கிறிஸ்து பிறப்பு விழாவாகும். ஆகவே இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்ற மகிழ்ச்சியில் நாம் திழைத்து இருக்க வேண்டும்.
நாம் ஒருவரில் ஒருவர் அன்பு கொண்டிருக்கும் போதுதான் மற்றவர்களை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். பேச முடியும். சமூதாயத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
மனிதனுடைய வாழ்வு மரணத்துடன் முடிந்து விடுகின்றது என்று நம்பியிருந்த மனிதனுக்கு கிறிஸ்து பிறப்புக்கு பின்பு மரணம் இறுதி அல்ல என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.
ஆகவே இது பிறப்பு விழா மட்டுமல்ல மற்றவர்களை அன்பு செய்யும் விழாவாக மற்றவர்களை புரிந்து கொள்ளும் விழாவாகவும் இருக்கின்றது என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நிபந்தனையற்ற முறையில் எமது பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்படுகின்றது. அவ்வாறு நாமும் நிபந்தனையற்ற முறையில் மற்றவர்களுக்கு மன்னிப்பு வளங்கும் உள்ளங்களாக இருக்க வேண்டும்.
நாம் மற்றவர்களை மன்னித்து வாழாவிடில் கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் எத்தனை முறை கொண்டாடினாலும் அது பிரயோசனமற்ற விழாவாகவே அமையும்.
கிறிஸ்து இன்றைய நாளில் எமக்கு அன்பின் அழைப்பாகவே எமக்கு விடுத்துள்ளார். ஆகவே நாம் ஒவ்வொருவரும் அன்பை பகிர்ந்து வாழும் மக்களாக வாழ முனைவோம் என இவ்வாறு அருட்பணி எஸ்.அன்ரன் அடிகளார் தனது மறையுரையில் இவ்வாறு தெரிவித்தார்.