கொக்கட்டிச்சோலைக் குளங்களும் ஊரின் முக்கியத்துவமும்.

சோலையூர் குருபரன்.

நீர் வளமும் நிலவளமும் நிறைந்த நம்

ஊரெனும் பேரூரே…”

ஆதிகால மனித நாகரிகம் நதிக்கரைகளை மையப்படுத்தியே ஆரம்பித்தன. ஆறுகள், குளங்கள், ஏரிகள், அருவிகள், நீரோடைகள், குட்டைகள் ஆகிய நீர்நிலைகளை மையப்படுத்தித், தொழில், வாழ்விடம், வழிபாட்டிடம், உணவு ஆகிய தேவைகளுக்கேற்ப அமைத்துக் கொண்டனர். நீரை இயற்கையின் கொடையாகவும், உயிர் வாழ்வதற்கு ஆதாரமாகவும் கருதினர். காலப் போக்கில் நீரைப் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டனர். நீரை ஆலயங்களோடு தொடர்புபடுத்தினார்கள். சில நீர்நிலைகளைப் புனித நீராகவும் பயன்படுத்தினர். அவ்வாறுதான் நீர்நிலைகள் பிரபல்யம் பெற ஆரம்பித்தன. அதனை அடிப்படையாகக் கொண்டு சமூக, கலாசார, பொருளாதார, கல்வி, வைத்தியம், ஏனைய துறைகள் யாவும் வளர்ச்சியடைய ஆரம்பித்தன. ‘நீரின்றி அமையாது வாழ்க்கை’ என்பதற்கிணங்க நீரை வாழ்க்கைக்கு மாத்திரமின்றி பல்வேறு தேவைக்கும் பயன்படுத்திக் கொண்டதில் இருந்து ஒரு நாட்டின் அபிவிருத்தி நீர்வளத்தை மையப்பத்தித் தீர்மானித்துக் கொள்கின்ற முறைமையும் வலுவாக வளர்ச்சியடைய ஆரம்பித்தன.

நாடு, நகர், கிராமம், சிற்றூர், பட்டி, தொட்டி எனப் பல இடங்களிலும் நீர்நிலைகளும் காணப்பட்டன. பல இடங்களில் வாழ்ந்த மக்கள் அவற்றை ஒட்டியே வாளப் பழகிக் கொண்டனர். இவ்வாறு கிராமங்களில் காணப்பட்ட பல சிறிய குளங்கள், ஏரிகள், நீரோடைகள், குட்டைகள் ஆகியன இயற்கை, மனித நடவடிக்கைகள் காரணமாகக் காணாமல் போய்விட்டன. பல இடங்களில் கிராமத்தின் அடையாளமாகவும், அதன் புகழுக்கும் காரணமாக நீர்நிலைகள் அமைந்து விடுகின்றன. இவ்வாறுதான் கொக்கட்டிச்சோலையின் அடையாளமாகவும் பல நீர்நிலைகள் இருந்தன. வில்வாக்கேணிக்குளம் (தாமரைக்குளம்), புறாக்குளம், சத்துருக்கர் குளம் (தீர்த்தக்குளம்), சின்னப்பாலத்தடிக் குளம், வெட்டுக்குளம், சாமித்தார்குளம் (பெரிய கட்டுக்குளம், சுவாமி தீர்த்தமாடும் குளம்), ஈச்சையடிக் குளம், மருங்கையடிக் கட்டுக்குளம், காயனடிக் குளம் ஆகிய குளங்களையும் மேற்குப் பறமாக நீண்டு பரந்து கிடக்கும் மட்டக்களப்புக் கடல்நீரேரியினையும் (களப்பு) குறிப்பிடலாம். இதில் ஈச்சையடிக் குளம், மருங்கையடிக் கட்டுக்குளம், புறாக்குளம் (புறக்குளம்), சத்துருக்கர் குளம் (தீர்த்தக்குளம்) ஆகியன இயற்கை, மனித நடவடிக்கை காரணமாக காணாமல் போய்விட்டன. இக்குளங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதொ ஒருவகையில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. 1980 க்கு முன்னர் இப்பிரதேசத்தில்  இக்குளங்களும் கொக்கட்டிச்சோலைக் கிராமமும் பெற்றிருந்த முக்கியத்துவங்கள் பற்றியும் கூறுவதே இக்கட்டுரையாகும்.

கொக்கட்டிச்சோலைக் கிராமம் கிழக்குப் புறமாக குஞ்சிலாகுளம், வயல்வெளிகள், பட்டிப்பளைக் கிராமத்தையும், தெற்கே களப்பு, கண்ணாக்காடு, வயல் வெளிகளையும், மேற்கே வயல் வெளிகளையும், கண்ணாக்காடு, கடநீரேரியினையும் வடக்கே சிறிய காடு, முனைக்காடுக் கிராமம், முதலைக்குடாக் குளம், மகிழடித்தீவுக் கிராமம் ஆகியவற்றையும் எல்லையாகக் கொண்டு இப்பிரதேசத்திலுள்ள பதினொரு கிராமங்களுக்கும் கொக்கட்டிச்சோலை தலைமைக் கிராமமாக விளங்குகிறது. அதற்குக் காரணம் வரலாற்றுச் சிறப்புமிக்க, பழமையும் பெருமையும் போற்றும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம், விநியோகத் தபால் நிலையம், கிராம நீதிமன்றம், கிராம சபை (பிரதேச சபை), நெல் சந்தைப்படுத்தும் சபையினரின் நெற் களஞசியசாலை, விவசாய சேவை நிலையம், அரச மருந்தகம் Dispensary)  வாரத்தில் இரு நாள் இயங்கிய இலங்கை வங்கி, வாரத்தில் ஒரு நாள் செயற்பட்ட பொலிஸ் உப அலுவலகம் ஆகிய அரச அலுவலகங்களைக் கொண்டு பிரதேசத்தின் மைய நிலையமாக இயங்கி வந்தது. 23-11-1978 அன்று வீசிய அகோரச் சூறாவளியுடன் கிராம நீதிமன்றம், மிகப் பெரிய நெற் களஞ்சியசாலை, வாரத்தில் இரு நாள் இயங்கிய இலங்கை வங்கி உப கிளை, பொலிஸ் உப அலுவலகம் ஆகியன இயங்காமல் போயின. இப்போது நீதி மன்றம், நெற் களஞ்சியம் ஆகியவற்றைத் தவிர யாவும் மறுபடி இயங்க ஆரம்பித்ததோடு கொக்கட்டிச்சோலை சிறிய வர்த்தக நகரமாகவும் விளங்குகிறது.

தான்தோன்றீ்ஸ்வரர் ஆலயத்துக்கு முன்னால் ஆரம்ப காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடமும் பின்னர் அவ்விடத்தில் 1920  ஆம் ஆண்டு மெதடிஸ்த திருச்சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையும் காணப்பட்டது. கல்முனை மெதடிஸ்த திருச்சபையினரின் கட்டுப்பாட்டில் இப்பாடசாலை இயங்கி வந்தது. திருச்சபையினரின் பணிப்பின் பேரி்ல் கல்முனையைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் திரு.நாகமணி என்பவர் சைவ சமய மாணவர்களுக்குக் கிறிஸ்தவ கீதங்களைப் போதித்தமையால் ஊர்ப் பெரியோர்கள் எதிர்புக் காட்டவே 1935 ஆம் ஆண்டு வண. எசப் அடிகளார் பாடசாலையை மூடிவிட்டார். அதனால் ஊர் மக்கள் இரு பிரிவினராகப் பிரிந்து வன்முறையில் ஈடுபடவே பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு யாழ்பபாணம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதற்கிடையில் தாளங்குடா பங்குத் தந்தை கொக்கினெட் அடிகளார் (பிரான்ஸ்) கொக்கட்டிச்சோலையில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை மதம் மாற்றிக் கத்தோலிக்க தேவாலயம் அமைக்கும் திட்டத்துடன் இருந்த வேளையில் இச்சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கத்தோலிக்க, மெதடிஸ்த சமயத்தவர்கள் மற்றும் தன்னைநாடி வந்தவர்களிடம் ஒப்பந்தம் ஒன்று செய்து வழக்கினையும் நடத்தினார்.  வழக்கு விசாரிக்கப்பட்டுச் ‘சகல மதப் பிரிவினரும் தத்தமக்குரிய பாடசாலைகளை அமைக்கலாம்’ என 1936 இல் தீர்ப்பளிக்கப்பட்டது.  தின்ணைப் பள்ளியும், மெதடிஸ்த பாடசாலையும் இருந்த இலுப்பை மரத்துக்கு அருகில் பெரிய வாசிகசாலை கட்டப்பட்டு இயங்கி வந்தது. அவ்வாசிகசாலை 1978 ஆம் ஆண்டுச் சூறாவளியினால் தரைமட்டமாகியது. அவ்விடம் இப்போதும் ‘பள்ளித் திடல்’ என அழைக்கப்பட்டு வருகின்றது.

வழக்கின் தீர்ப்பினைத் தொடர்ந்து கோக்கினெட் அடிகளார் 1936 இல் மருந்தகத்துக்கு வடக்குப் புறமாக இருந்த காணியில் பிரதான வீதிக்கு (மேற்கில்)  அருகில்  முதலில் உரோமன் கத்தோலிக்க தேவாலயத்தினையும் பின்னர் தேவாலயத்தக்குப் பின்னால் மருந்தகத்துக்கு அருகில் அதே  ஆண்டில் உரோமன் கத்தோலிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையினையும் நிறுவினார். சூறாவளியின் அகோரப் பிடிக்குள் அகப்பட்ட கத்தோலிக்க தேவாலயம், பாடசாலை, பழைய பழைய (பழைய குட்டைக்கல் கட்டிடம்) ஆகியன தரை மட்டமாகின. 1961 இல் மகிழடித்தீவில் கிராமிய மருந்தகம் பெரிய கட்டிடம் வைத்தியர் விடுதியுடன் அமைக்கப்பட்ட பின்னர் கொக்கட்டிச்சோலை மருந்தகம் மூடப்பட்டது.

1934 ஆம் ஆண்டு திரு.அ.ஏகாம்பரம்பிள்ளை, திரு.ப.ஏரம்பமூர்த்தி, சிவஸ்ரீ.க.கு.சின்னத்தம்பிக் குருக்கள், திரு.திருமெனிப்பிள்ளை ஆகியோரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட ‘கந்தோர் பள்ளி’ அல்லது ‘சைவப் பள்ளி’ பதிவு செய்யப்படாமல் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்தது. வழக்குத் தீர்ப்பின் பின்னர் இவர்கள் மட்டக்களப்பு இராமகிருஷ்ண சங்கத்தாருடன் தொடர்பு கொண்டு 1936 ஆம் ஆண்டு அதே இடத்தில் சுவாமி விபுலாநந்தரினால் கல்வைக்கப்பட்டு  1937 ஆம் ஆண்டு சுவாமி நடராஜாநந்தாவினால் ‘விபுலாநந்தர் வித்தியாலயம்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு 01-10-1937 இல் பதிவு செய்ப்பட்டது. 1952 இல் இப்பாடசாலை இராமகிருஷ்ணமிஷன் தமிழ் கலவன் பாடசாலை எனப் பெயர் மாற்றம் பெற்றது. அப்பாடசாலை 1937 – 1946 வரை தரம் 1 – 9 வரை கொண்ட கனிஷ்ட இடைநிலைப் பாடசாலையாக இயங்கி வந்தது. 1946 இல் தரம் இறக்கப்பட்டு 1979 திசெம்பர் வரை தரம்   1 – 5 வரை வரையும் 1980 ஆம் ஆண்டில் இருந்து படிப்படியாகத்  தரம் உயர்த்தப்பட்டு தற்பொழுது வகை 1சீ மகா வித்தியாலயமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

சூறாவழியின் பின்னர் இப்பாடசாலை இரண்டு மாதங்களுக்கு மேல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக உதவி அரசாங்க அதிபர் உபகாரியாலயமாக இயங்கி வந்தது. மட்டக்களப்புப் பிராந்திய கல்விப் பணிப்பாளரின் உத்தரவுக்கு இணங்க வட்டாரக் கல்வி அதிகாரியின் பணிப்பின் பேரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட உரோமன் கத்தொலிக்கமிஷன் தமிழ் கலவன்  பாடசாலை 02-02-1979 அன்று இராமகிருஷ்ணமிஷன் பாடசாலையுடன் இணைக்கப்பட்டது. சூறாவளின் பின்னர் கட்டிடத்தைத் திருத்தி அமைத்து, புதியதாகத் தற்காலக கட்டிடமும் அமைக்கப்பட்டு அதில் இயங்கி வந்தது.

கொக்கட்டிச்சோலையில் தான்தோன்றீஸ்வரர் ஆலயம், கண்ணகி அம்மன் கோயில், முத்துலிங்கப் பிள்ளையார் கோயில் சித்திர வேலாயுதர் கோயில் ஆகியவற்றில் இக்காலப் பகுதியில் மக்கள் வழிபாடு இயற்றி வந்தனர். தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துக்கும் இங்குள்ள குளங்களுக்கும் இடையில் பண்டைய காலம் முதல் நெருங்கிய தொடர்புகள் இருந்தன.  இவ்வாலயத்தின் தைப்பூசத் தீர்த்தம் வில்வாக்கேணி குளத்தில் (தாமரைக்குளம்) ஆடப்பட்டு வருகின்றது. மாசிமகம், பிள்ளையார் காப்புத் தீர்த்தம், திருவாதிரைத் தீர்த்தம் ஆகியன சாமித்தார்குளத்துக்கு மேற்குப் புறமாக இருந்த ஈச்சையடிக்குளத்தில் ஆடப்பட்டு வந்தன. வருடாந்தத் தேரோட்ட உற்சவத்தின் இறுதிநாள் தீர்த்தோற்சவம் சாமித்தார் குழத்தில் ஆடப்பட்டு வந்தன. அதேபோல் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் மாசிமாத மகாமகத் தீர்த்தோற்சவம் மண்முனை ஆற்றில் இன்றுவரை ஆடப்பட்டு வருகின்றது. தற்பொழுது தைப்பூசம், மகாமகம் ஆகியவற்றைத் தவிர மற்றைய தீர்த்தங்கள் யாவும் ஆலயத் தீர்த்தக் கினற்றில் ஆடப்பட்டு வருகின்றன. 1929 ஆம் ஆண்டுக்கு முன்னர் மாசி மகத் தீர்த்தம் ஆலயத்தின் மேற்குப் புறமாக உள்ள தொணித் துறையில் ஆடப்பட்டு வந்ததை அறிய முடிகிறது. பட்டிப்பளைப் பிள்ளையார் கோயில் பிள்ளையார் காப்பு விரதத் தீர்த்தத்தினை காயானடிக் குளத்தில் ஆடி வருகின்றனர்.

வில்வாக்கேணிக் குளத்தில் சுவாமி தைப் பூசத் தீர்த்தமாடியது போல் குளத்தின் கிழக்குப் புறமாக உள்ள ஆலமரத்தடியில் புகழ்பெற்ற சடங்கொன்று பல தசாப்தங்களுக்கு முன்னர் வருடாவருடம் தொடர்ச்சியாக நடந்திருப்பதை அறிய முடிகிறது. வைரவக் கடவுளின் குருவாகிய காளமாமுனிக்கு திரு.ஏரம்பமூர்த்தி, திரு.ஏகாம்பரம்பிள்ளை குடும்பத்தினர் மிகச் சிறப்பாக நடத்தி வந்திருப்பதனை அறியக் கிடக்கிறது. பல பூசாரிமாரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இச்சடங்கில் தெய்வமாடுதல், கட்டுச் சொல்லல், தெய்வத்தைக் கட்டுதல், விடுவித்தல் ஆகியனவும் இடம்பெற்றதாகவும் அறிய முடிகிறது. இச்சடங்கு தொடர்பான விரிவான விளக்கம் முன்னைய கட்டுரை ஒன்றில் கூறப்பட்டிருக்கின்றது. இக்குளம் நான்கு புறத்திலும் பல மரங்களைக் கொண்டிருந்தது. பிற்காலத்தில் இக்குளத்தில் செந்தாமரை நடப்பட்டு தாமரை பூத்துக் குலுங்கிச் செழிப்பாக இருந்ததனால் இது ‘தாமரைக்குளம்’ என அழைக்கப்பட்டது.

ஊரின் மத்தியில் பிரதான வீதிக்கருகில் பெரிய நிரந்தரக் கட்டிடமொன்றில் கிராம நீதிமன்றம் இயங்கி வந்தது. இதற்கான நீதிபதி உட்படச் சட்டத்தரணிகள், பணியாளர்கள் யாவரும் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இருந்து பிரதி செவ்வாய்க் கிழமை தோறும் வருகைதந்து நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இங்கு பெரும்பாலும் குற்றவியல் வழக்குகளே நடத்திச் செல்வப்பட்டன. நீதிபதியினை மண்முனைத் துறையில் இருந்து ஏற்றி வருவதற்கு இரும்பச்சு ஒற்றை மாட்டுக் கரத்தை நீதிமன்ற வளாகத்தில் நிரந்தரமாக இருந்தது. வாரத்தில் ஒருநாள் முழுமையான நீதிமன்றமாகச் செயற்படடது. 1978 சூறாவளியின் காரணமாக நீதிமன்றக் கட்டிடம் முற்று முழுதாகப் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் நீதிமன்றச் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

கிராம சபைக்கும் கமநல சேவை நிலையத்துக்கும் இடையில் நெல் சந்தைப்படுத்தும் சபைக்குரிய பாரிய நெற் களஞ்சியசாலை அமைந்திருந்தது. 150,000 க்கு மேற்பட்ட நெல் மூடைகளைச் சேமித்து வைக்கக்கூடிய மிகப் பெரிய நான்கு கட்டிடங்களைக் கொண்ட நெற் களஞ்சியமாக இருந்தது. இப்பிரதேசத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் விளையும் நெல் அனைத்தும் நியாய விலையில் கொள்வனவு செய்யப்பட்டு தெற்காசியாவின் மிகப் பெரிய அரச அரிசி ஆலையாகிய சவளக்கடை அரிசி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரிசி ஆலைக்கு ஆரம்ப காலத்தில் அதிகாரிகள், பணியாளர்கள், பிரயாணிகளை ஏற்றிச் செல்வதற்கும் நெல், அரிசி மற்றும் ஏனைய பொருட்களை ஏற்றி இறக்குவதற்கும் மட்டக்களப்புக் கச்சேரியில் இருந்து சவளக்கடை வரை களப்பு நீர்வழிப் போக்குவரத்துக்கென பாரிய லோஞ்சுகள் பயன்படுத்தப்பட்டன. லோஞ்ஸ் தரிப்பிடங்களான மன்டூர் குருமன்வெளித்துறை, பட்டிருப்பு, அம்பிளாந்துறை, மண்முனைத்துறை ஆகிய இடங்களில் அம்பலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கொக்கட்டிச்சோலை நெற் களஞ்சியசாலை சூறாவளியினால் முற்றாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் செயற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டன.

வியாபார நிலையங்களை எடுத்துக் கொண்டால், பெரிய கடைகளைப் பெரும்பாலும் இஸ்லாமிய வியாபாரிகளே வாடகைக்கு எடுத்து நடாத்தி வந்தனர். கொக்கட்டிச்சோலைச் சந்தியில் திரு.சாமித்தம்பி உபதபாலதிபர் கட்டிக் கொடுத்த தகரக் கடையினை குளத்துப் போடியார் எனப்படும் ஓர் இஸ்லாமியர் நடத்தி வந்தார். பெரிய அளவிலான இச்சில்லறைக் கடையுடன் சித்த, ஆயூர்வேத வைத்தியத்துக்குரிய பட்டோலைச் சாமான்கள், டீசல், மண்ணெண்ணெய், ஓலைக் கிடுகுகள் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டன. திரு.சற்குணம் (வேலப்பு) என்பவர் கட்டிக் கொடுத்த கடையில் மம்மலிபாவா என்பவர் பெரிய சில்லறைக் கடை வைத்திருந்தார். திரு.முத்துபண்டா, திரு.வைரமுத்து ஆகியோருக்குச் சொந்தமான கடையினை முஸ்தபா காக்கா (வருசக் காக்கா) என்பவர் பெரிய சில்லறைக் கடை வைத்து நடத்தினார். திரு.முருகேசு என்பவரின் கடையை ஹச்சிக் காக்கா (ஆட்டுக்காரக் காக்கா)என்பவர் சில்லறைக் கடை வைத்து நடத்தி வந்தார். நூலகர் திரு.சி.சின்னராசா என்பவரின் கடையினை இப்ராகிம் வைத்தியர் சில்லைறை, தேநீர் கடையாக நடத்தி வந்தார். மணற்பிட்டிச் சந்தியில்  புகையிரத நிலைய அதிபர் திரு.சிவஞானம் என்பவரின் நிரந்தரக் கட்டிடத்தில் ஆதம்லெவ்வை பக்கீர் என்பவர் பெரிய அளவிலான சில்லறை, தேநீர் கடையினை நடத்தி வந்தார். இன்றும் மணற்பிட்டிச் சந்தியினை ‘பக்கீர் கடைச் சந்தி’ என அழைத்து வருகின்றனர். மணற்பிட்டிச் சந்தியில் திரு.தம்பிப்பிள்ளை, திரு.கதிர்காமத்தம்பி ஆகியோரும் தேநீர் கடைகள் வைத்திருந்தனர். அக்காலத்தில் பொருள் கொள்வனவுக்காகவும் தேநீர் அருந்துவதற்காகவும் மாட்டு வண்டில்கள் பல எவ்வேளையிலும் தரித்து நிற்பதைக் காண முடிந்தது.

தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்கு வடக்குப் புறத்தில் திரு.க.சிவலிங்கம் என்பவரும் ஆலயத்துக்கு முன்னால் திரு. க.சுப்பிரமணியம் (சுப்பர்) ஆகிய சகோதரர்கள் இருவரும் சில்லறைக் கடைகளை நடாத்தி வந்தனர். ஆலயத் தீர்த்தக் கிணற்றுக்கு முன்னால் திரு.க.சின்னத்தம்பி என்பவர் சில்லறை, தேநீர் கடை இரண்டையும் பெரிய அளவில் நடத்தி வந்தார். பிரதான வீதியில் ரெட்ணம், சாமித்தம்பி ஆகியோர் தேநீர் கடைகளையும் சுந்தரம்  என்பவர் சிறிய சில்லறைக் கடை ஒன்றினையும் நடாத்தி வந்தனர்.  கதிர்காமத்தம்பி இன்னொரு கடையினைக் கொக்கட்டிச்சோலைச் சந்திக்கு அருகிலும் நடத்தி வந்தார். திரு.சுப்பிரமணியம் கோயிலுக்கு முன்னால் இருந்த கடையை மூடிப் பிரதான வீதியில் சில்லறைக் கடை நடாத்தி வந்தார். பெரும்பாலான கடைகள் பிரதான வீதியின் இரு மருங்கிலும் அமைந்திருந்தன. கல்கட்டுப் பாலம், மணற்பிட்டிப் பாலம் இரண்டும் மரப் பாலமாக அமைக்கப்பட்டிருந்தன. தற்பொழுது கல்கட்டுப் பாலம் மூடப்பட்டு, மணற்பிட்டிப் பாலம் கொங்கிறீட்டினால் கட்டப்பட்டிருக்கிறது.

கொக்கட்டிச்சோலைக் கிராமத்தில் வாழ்ந்தவர்களில் பலர் பல்வேறு அரச துறைகளிலும் பணியாற்றி வந்தனர். 85 வீதத்துக்கு மேற்பட்டோர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். சில பரம்பரைப் போடிமார் உட்படச் சில சிறு போடிமாரும் வாழ்ந்து வந்தனர். விவசாய நடவடிக்கைகளுக்காகவும் காட்டுத்தொழில் மற்றும் பல்வேறு தேவைகளுக்காகவும் வண்டில் மாடுகள் வைத்திருந்தனர். சிலரிடம் ஆடு, மாட்டுப் பட்டிகளும் இருந்தன. திரு.குமரகுரு (பெரியதம்பிப்) போடியார், திரு.சத்துருக்கப் போடியார் இருவரிடமும் மண்ணெய்யில் இயங்கும் உளவு இயந்திரங்கள் இருந்தன. நெல் குற்றும் இயந்திரங்கள் நான்கு பேரிடம் இருந்தன. ஊரில் அமைதியும் சந்தோசமும் பரவிக் கிடந்தன. துவிச்சக்கர வண்டியில் பல இ்ஸ்லாமிய வியாபாரிகளும், தமிழ் வியாபாரிகளும் வியாபாரம் செய்து வந்தனர். 1974 ஆம் ஆண்டு முதல் பேருந்துப் போக்குவரத்தும் நடைபெற்றது. இவ்வாறு குறிப்பிடத்தக்க வசதிகளுடன் வசதிகளுடன் மக்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.