( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 75 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது.இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த காரைதீவு மண்ணில் இடம் பெறுவது பெருமைப்பட வேண்டிய விடயமாகும். இத்தருணத்தில் எமது உயரிய நோக்கான சுயாட்சியை நோக்கி நாங்கள் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்ஏ சுமந்திரன் நேற்றுமுன்தினம்(18) திங்கட்கிழமை மாலை காரைதீவில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடி உரையாற்றிய போது தெரிவித்தார் .
இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத்தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கட்சி பணிமனையில் இப் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
அச்சமயம் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இரா. சாணக்கியன் மற்றும் இளைஞர் அணி துணைத் தலைவர் அருள். நிதாஞ்சன் ஆகியோரும் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள் .
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது..
இலங்கையில் தமிழருக்காக வடகிழக்கு தமிழ் பேசும் மக்களுக்காக 75 ஆண்டுகளுக்கு முன்ன ஆரம்பிக்கப்பட்டது இந்த இலங்கை தமிழரசுக் கட்சி.
எமது மக்கள் சுயாட்சியாக தங்களுடைய கருமங்களை தாங்களே ஆளக்கூடிய வகையில் நாட்டில் ஏனைய இன மக்களுடன் சமமாக வாழ வேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்த கட்சி பயணிக்கிறது. அதில் இணைந்து செயல்படுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.
சுயாட்சி என்ற இலக்கை அடைய இந்த 75 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்க வேண்டும் . என்றார்.