மனித உரிமையென்பது ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கின்ற பிரிக்க முடியாததொன்றாகும்

பாறுக் ஷிஹான்
 
மனித உரிமைகள் பாதுகாவலர்களின் பாதுகாப்பு குறித்தான  பொது வழிகாட்டுதல்கள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பற்றி அனைவர்களும் அறிந்திருக்க வேண்டும்.

 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர்- அப்துல் அஸீஸ்
 
மனித உரிமையென்பது ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கின்ற பிரிக்க முடியாததொன்றாகும். அவ்வுரிமைகளை எவரும் பிரித்துக் கொடுக்கவோ அல்லது பேரம் பேசவோ முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச  செயலகத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ்  கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
 
அப்துல் அஸீஸ்   கருத்துத் தெரிவிக்கும் போது 
 
  சகலரிற்கும், கௌரவம் சுதந்திரம் மற்றும் நீதி என்ற தொனிப் பொருளில் இவ்வருட நிகழ்வு இடம்பெற்று வருவதாகவும், மனித உரிமைகள் பாதுகாவலர்களின் பாதுகாப்பு குறித்தான  பொது வழிகாட்டுதல்கள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  பரிந்துரைகள் பற்றி  விளக்கமளித்தார். 
மனித உரிமைகள் பாதுகாவலர்கள் பற்றி  1998ம் ஆண்டு டிசம்பர் 9 ம் திகதி ஐ.நா. பொதுச்சபை மனித உரிமைகள் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் தனிநபர்கள், குழுக்கள் இவர்களின் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. மனித உரிமைகள் பாதுகாவலர்கள் என்பவர்கள் தனித்தனியாக அல்லது ஏனைவர்ளுடன் இணைந்து மனித உரிமைகளை அமைதியாக பாதுகாப்பவர்கள். பெண்கள் குழந்தைகள்,  இன மற்றும் மத சிறுபான்மையினால் இயலாமையுடையவர்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தேசிய சர்வதேச மட்டங்களில் மனித உரிமைகள் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் அவற்றை தனித்தனியாக அல்லது ஏனையவர்களிடம் ஒருங்கிணைத்து  ஊக்குவிக்கவும் நடைமுறைப்படுத்தவும் அனைவருக்கும் உரிமைகள் உள்ளது எனவும்
 
சமூக பொருளாதார அரசியல் மற்றும் ஏனைய துறைகளில் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தங்களது செயற்பாடுகளை ஈடுபடுவதற்குத் தேவையான அனைத்து சூழ்நிலைகளையும் அரசு ஏற்படுத்தித்தரல் வேண்டும். என்பதுடன் அரச அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் பாதுகாவலர்கள் பற்றிய விழிப்புணர்வினையும் பாதுகாப்புப் படையினரை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளையும் படையினரின் பாடத்திட்டத்திற்குள் இதனை உள்ளடக்கி கற்பித்தல் நடவடிக்கைகளையும் செய்வதற்கான பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செய்துள்ளது என மேற்கண்டவாறு   தெரிவித்தார்.