இலங்கை நிர்வாக சேவை தரம் 1ஐச் சேர்ந்த எந்திரி நடராஜா சிவலிங்கம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானால் நியமிக்கப்பட்டு அவருக்கான நியமனம் கடிதம் ஆளுனரால் அவரது அலுவலகத்தில் வைத்து திங்கட்கிழமை (18) பகல் வழங்கப்பட்டது.
அதனையடுத்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் பதில் செயலாளராக எந்திரி நடராஜா சிவலிங்கம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதன் போது மாகாணப் பணிப்பாளர்கள், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
காரைதீவைச் சேர்ந்த இவர் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக சேவையாற்றி வரும்வேளையில் இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இலங்கை நிருவாக சேவை (தரம் -1 ) உத்தியோகத்தரான பொறியியலாளர் சிவலிங்கம் மன்னார் மாவட்ட கமநலசேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாவட்ட கமநலசேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளராகவும், உலக வங்கி திட்டத்தின் சிமாட் கிலைமட் சிறிலங்கா (Smart climate Sri Lanka) திட்டப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாணக் கல்விப் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது