செயற்கை இனிப்பூட்டிகளின் பாவனை – உண்மை நிலவரம் என்ன?

Dr.அ. லிலுக்சன் (MBBS)

செயற்கை இனிப்பூட்டி என்பது காபோவைதரேற்று அல்லாத, உணவின் இனிப்பு சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படும் செயற்கை பதார்த்தமாகும். உணவின் இனிப்பு சுவையை அதிகரிக்கும் அதேவேளை சாதாரண சீனியை போலல்லாது  மிகவும் குறைந்த அளவு கலோரிபிரமாணத்தையே இது வழங்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளர்கள் மற்றும் உடல் பருமனை குறைக்க விரும்புவோர் என பலருக்கும் ஏற்றதாக ஏராளமான செயற்கை இனிப்பூட்டிகள் சந்தையில் கிடைக்கின்றன.

தேநீர், கோப்பி மற்றும் பான வகைகளுக்கு சீனிக்கு பதிலாக சேர்க்க என பல செயற்கை இனிப்பூட்டிகள் காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளர்களுக்காக தயாரிக்கப்படும் பெருமளவான பால்மா வகைகள் இந்த செயற்கை இனிப்பூட்டிகளை சுவைக்காக பாவிக்கின்றன. சீனி அல்லாது செயற்கை இனிப்பூட்டிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ஐஸ்க்ரீம், ஜெலி, சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவை ‘சீனி சேர்க்கப்படாதது’, ‘பூச்சியக் கலோரி’ என விளம்பரப்படுத்தப்பட்டு நீரிழிவு நோயாளர்கள் மற்றும் உடல் பருமனை குறைக்க விரும்பும் மக்களை இலக்காக கொண்டு விற்பனை செய்யப்படுகிறது.

இனிப்பு சுவையூட்டிகள் சாதக பாதகங்களை சுட்டிக்காட்டி பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது பற்றிய அடிப்படை அறிவு மக்களுக்கு அவசியமாகும்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA – US),  உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும்  உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) போன்ற நிபுணத்துவ அமைப்புகள் செயற்கை சுவையூட்டிகளின் பாவனையை கட்டுப்படுத்த செயற்பட்டு வருகின்றன. இவ் அமைப்புகள் பயன்படுத்தப்படும் செயற்கை சுவையூட்டிகளின் வகை மற்றும் பிரமாணம் பற்றிய ஒழுங்கு முறைகளை பேணுவதுடன், இவற்றால் அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகள் மட்டுமே சந்தையில் பாவனைக்கு விடப்பட வேண்டும். இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் கீழ் செயற்கை உணவு சுவையூட்டிகளின் பாவனை பற்றிய ஒழுங்கு முறைகள் வெளியிடப்பட்டன. இவற்றிற்கு அமைவாக சோர்பிடோல் (Sorbitol) மனிடோல் (Mannitol), ஐசோமெல்ட் (Isomalt), மோல்டிடோல் (Maltitol), லக்ட்டிடோல்(Lactitol), சைலிடோல் (Xylitol), எரித்ரிடோல்(Erythritol), நியோடேம் (Neotame),  ஏசல்பெம் (Acesulfame K), அஸ்பார்ட்டேம்(Aspartame), சுக்ரலோஸ் (Sucralose), சக்கரின்(Saccharin), ஸ்டேவியல் கிளைகோஸைட் (Steviol glycoside) ஆகியவை மட்டுமே இலங்கையில் அங்கீகரிக்கப்படடதாகும். உடற்பருமனை கட்டுப்படுத்தும் நோக்குடன் செயற்கை சுவையூட்டிகளை பாவிப்பதால் எவ்வித பயனும் இல்லை எனவும் நீண்ட கால பாவனை மூலமாக உடற்பருமன் அதிகரிக்க நேரிடும் எனவும் ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இதனால் உடற்பருமனை கட்டுப்படுத்தும் நோக்குடன் இவற்றை பாவிப்பதற்கு  உலக சுகாதார ஸ்தாபனம் தடை விதித்துள்ளது. மாறாக பழங்கள் போன்ற இயற்கை இனிப்புணவுகள் மற்றும் இனிப்பு சேர்க்கப்படாத உணவுகளை உட்கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இனிப்பு சுவையூட்டிகள்   சிறுவர்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் உலக சுகாதார ஸ்தாபனமானது நீரிழிவு நோயாளர்களிடையே இனிப்பூட்டிகளின் பாவனைக்கு எதிராக பரிந்துரை செய்யவில்லை. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் குடி பானங்களுக்கு சுவையூட்ட இவ்வாறான இனிப்பூட்டிகளை பயன்படுத்தலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இவற்றை பயன்படுத்துவது உகந்ததல்ல. கர்ப்ப காலத்தில் இவற்றை பாவிப்பதால் பாதக விளைவுகள் ஏற்படும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதால் நீரிழிவு நோய்க்கு என சிபாரிசு செய்யப்படட உணவு வகைகளில் இச்சுவையூட்டிகள் சேர்க்கப்படாத உணவுகளை வாங்குவது சிறந்தது.

மேற்குறித்த இனிப்பூட்டிகள் இதுவரையில் பாவனைக்கு உகந்ததற்றதாக தடை செய்யப்படவில்லை. நீரிழிவு நோயாளர்கள் இனிப்பு சுவையை சுவைக்க விரும்பும் பட்சத்தில் இச்சுவையூட்டிகளை பயன்படுத்தலாம்.  இருப்பினும் கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குறிப்பாக மூன்று வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் பாவனைக்கு உகந்ததல்ல. மேலும் உடற்பருமனை குறைக்க விரும்புவோர் இனிப்பூட்டிகளை பயன்படுத்துவதை தவிர்த்து முறையான உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது உகந்தது.

Dr.அ. லிலுக்சன் (MBBS)