விட்டமின் D எமது ஆரோக்கியத்திற்கு முக்கியமான நுண்ணூட்டச்சத்தாகும். நுண்ணூட்டச்சத்துக்கள் நாளொன்றிற்கு மிகவும் சிறிய அளவு மட்டுமே தேவைப்படுகின்ற போதிலும் பல்வேறு தீர்க்கமான உடற்தொழிற்பாடுகளுக்கு அவசியப்படுகின்றன. இதனால் அவற்றின் குறைபாடு ஆரோக்கியத்தை பாதிக்கிறது
எமது தோலானது சூரிய ஒளியில் இருந்து விட்டமின் D ஐ உற்பத்தி செய்து கொள்ளும் திறன் படைத்தது. நாளொன்றுக்கு தேவையான விட்டமின் டீ இன் பெரும் பகுதியை எமது தோலால் உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
மேலும், உணவில் இருந்தும் குறித்தளவான விட்டமின் டீ ஐ பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ள போதிலும் மட்டுப்படுத்தப்பட்ட உணவுகளே விட்டமின் டீ ஐ கொண்டுள்ளன. முட்டை, கடல் மீன்கள், நன்னீர் மீன்கள், இறைச்சி, பால் பொருட்கள் கணிசமான அளவு விட்டமின் னு அடங்கியுள்ளது. பொதுவாக காய்கறிகள் மற்றும் பழங்களில் விட்டமின் டீ இல்லை. ஏனினும் காளானில் குறிப்பிட்ட அளவு விட்டமின் டீ உள்ளது.
விட்டமின் டீ யின் பிரதான தொழிலானது என்புத்தெகுதியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதாகும். இது எலும்புகளின் கனிமமயமாக்கலை அதிகரிக்கிறது, தசைகளை வலுப்படுத்துகிறது. எனவே, விட்டமின் டீ குறைபாட்டின் போது எலும்பு வலி மற்றும் தசை பலவீனம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். மேலும், வைட்டமின் டீ குறைபாடு வயதானவர்களில் வீழ்ச்சி மற்றும் எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நோயெதிர்ப்பு செயல்பாட்டில் விட்டமின் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. நோயெதிர்ப்பு செயல்பாடு குறைவடையுமாயின். மீண்டும் மீண்டும் நோய்க்கு வழிவகுக்கும். மேலும், விட்டமின் டீ குறைபாடானது தன் உடலை தானே தாக்குகின்ற சில நோய்களின் (Auto immune diseases) உருவாக்கத்திலும் பங்களிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குருதிச்சுற்றோட்டத் தொகுதியின் சீரான தொழிற்பாட்டிற்கும் விட்டமின் டீ அவசியமாகும். விட்டமின் டீ குறைபாடானது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். மேலும், நீரிழிவு நோய் மற்றும் இன்சுலின் தொழிற்பாடு குன்றுவதுடன் சம்பந்தப்பட்ட இதர நோய்களின் தாக்கத்தையும் அதிகரிக்கின்றது.
மேலும் விட்டமின் டீ யானது நரம்பு தெகுதியின் தொழில்பாட்டுக்கும் இன்றியமையாததாகின்றது. விட்டமின் டீ குறைபாடானது சிந்தனைத்திறன் குறைவு, மறதி நோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். விட்டமின் டீ குறைபாடு சில புற்று நோய்களின் உருவாக்கத்திலும் குறிப்பாக குடல் புற்று நோய் உருவாக்கத்திலும் பங்களிப்பதாக ஆய்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.
மேலதிக உடல் நிறையானது விட்டமின் டீ குறைபாட்டிற்கான ஒரு காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதும் சில ஆய்வுகள் விட்டமின் னு குறைபாடு காரணமாக உடல் நிறை அதிகரிப்பதாகவும் குறிப்பிடுகின்றன.
அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் விட்டமின் டீ குறைபாடானது பாரதூரமான ஒரு சுகாதார பிரச்சனையாக உருவெடுப்பதாக சுட்டிக் காட்டுகின்றன. இலங்கையானது பூமத்திய ரேகைக்கு அண்மையில் உள்ள நன்கு சூரிய ஒளியைப் பெறுகின்ற ஒரு நாடாக இருந்த போதிலும், இவ்வாறு விட்டமின் டீ குறைபாடு அதிகரித்துள்ளமை பாரதூரமான ஓர் நிலையாகும்.
குறித்த ஆய்வின் பிரகாரம் இலங்கையில் பிரதானமாக நகர்புறத்தில் உள்ள வயதுவந்தவர்களில் விட்டமின் டீ குறைபாடானது 58.8வீதமாகவும். (Deficiency) விட்டமின் னு யின் அளவானது உரிய அளவை விட சற்று குறைவாக ( Insufficiency ) உள்ளவர்கள் 31.4 வீதமாகவும் எனவும் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் நகர்புறத்தில் உள்ள வயதுவந்தவர்களில் மொத்தமாக 90 வீதமானோர் உரிய அளவை விட குறைவாகவே விட்டமின் டீ ஐ கொண்டுள்ளனர். இந்த சுகாதார பிரச்சனை தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டிய தருணமிது.
மேலும் ஆய்வு முடிவுகளின் படி விட்டமின் டீ குறைபாடானது குறிப்பாக நகர்ப்புறங்களிலும், கடல்மட்டத்தில் இருந்து உயரமான இடங்களிலும் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆண்களை விட பெண்களிடையே பாதிப்பு அதிகமாக உள்ளது எனவும் வயது அடிப்படையில் 12 – 23 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.
இதற்கான காரணங்களை ஆராயும் போது சூரிய ஒளிக்கு முகம் கொடுக்காமையே பிரதான காரணியாகின்றது. வருடம் முழுவதும் போதுமான சூரிய ஒளி கிடைத்தாலும் நகர்புறங்களில் பெரும்பாலும் கூரையினுள்ளே வேலை செய்வதும், முழுவதுமாக உடலை மறைக்கும் ஆடைகள் அணிவதும், இள வயதினர் சூரியகதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்காக முகப்பூச்சுக்களை ( Sun screan ) பாவிப்பதும், சிறுவர்களும் இளம் பிராயத்தினரும் திறந்த வெளியில் விளையாடுவதில் நாட்டம் இல்லாமையும், வயது முதிர்ந்தவர்கள் பகல் வேளைகளில் வீட்டினுள் முடங்கி இருப்பதும் சூரிய ஒளிக்கு முகம் கொடுக்கும் அளவு குறைய காரணமாகிறது.
எனவே விட்டமின் டீ குறைபாட்டில் இருந்து விடுபட போதியளவு சூரிய ஒளிக்கு முகம் கொடுப்பது அவசியமாகிறது. அதிகாலையில் சூரிய ஒளியில் இருப்பது நல்லது என்று முன்பு நம்பப்பட்டாலும், சமீபத்திய சான்றுகள் விட்டமின் டீ உற்பத்திக்கு பகல் பொழுதே சிறந்தது என்று கூறுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது நன்மை பயக்கும்.
விட்டமின் டீ அதிகம் உள்ள முட்டை, கடல் மீன்கள், நன்னீர் மீன்கள், இறைச்சி, பால் காளான் போன்ற உணவுகளை உட்கொள்வதும் குறைபாட்டிலிருந்து விடுபட உதவும். சந்தையில் உள்ள சில உணவுப் பொருட்கள் விட்டமின் டீ யால் செறிவூட்டப்பட்டுள்ளன, மேலும் அத்தகைய தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது விட்டமின் டீ இன் தேவையான அளவை அடைய உதவும்.
தேவை ஏற்படும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனையுடன் விட்டமின் டீ மருத்துகளை உட்கொள்ளலாம் தன்னிச்சையாக விட்டமின் னு மருத்துகளை உட்கொள்ளும் போது அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் அபாயம் உள்ளதால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.
DR.அருணாசலம் லிலுக்சன் ( MBBS)