இலங்கை – மாலைதீவு நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவு

அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை – மாலைதீவு நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம்.எம். முஷாரப்  தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை – மாலைதீவு நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

 இலங்கைக்கான மாலைதீவு பிரதி உயர்ஸ்தானிகர் பாத்திமா ஜீனா இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான  பைஸல் காஸிம்,  ராஜிகா விக்ரமசிங்க,  சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்  மேஜர் சுதர்ஷன தெனிபிடிய செயலாளராகவும்,  செல்வம் அடைக்கலநாதன் உதவிச் செயலாளராகவும்,  இஷாக் ரஹுமான் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இலங்கை – மாலைதீவு நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபித்தல் இந்நாட்டின் நெருங்கிய நட்பு நாடான  மாலைதீவுடன் காணப்படும் நட்புறவை விருத்தி செய்வதற்கு உதவும் என இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.