கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொகைமதிப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பு

தமிழர்களின் பூர்வீகங்களை மாற்ற எடுக்கப்படும் முயற்சிகளுக்கு துணைபோகும் அரச அதிபருக்கெதிரான ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு.

தற்போது நாடுமுழுவதிலும் இடம்பெற்றுவரும் புள்ளிவிபர திணைக்களத்தின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலும் இன்று (12) ஆரம்பிக்கபட்ட நிலையில் மக்கள் எதிர்ரப்பின் காரணமாக கைவிடப்பட்டதாக தெரியவருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களாக புள்ளிவிபர திணைக்களத்தின் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கான பூர்வாங்க வேலைகள் மற்றும் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நாடுபூராகவும் இடம்பெற்றுவருகின்றது. இருப்பினும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் எதிர்நோக்கப்பட்டமையினால் இந்நடவடிக்கைகள் தாமதமடைந்துவந்தன. இருப்பினும் இன்று இவை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் சில கிராம சேவகர் பிரிவுகளில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டபோதிலும் பொது மக்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கான பூர்வாங்க பயிற்சிகளின்போது புள்ளிவிபர திணைக்களத்தால் வழங்கப்பட்ட கிராம அலுவர் பிரிவுகளுக்கான நில அளவைத் திணைக்களத் தகவல்கள் அவ்வவ் கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகளை பிரதிபலிக்காமையினால் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட்ட உத்தியோகத்தர்கள் தங்களது ஆட்சேபங்களை தெரிவித்து இக்கடமைகளில் இருந்து விலகியிருந்தனர். தற்போது எல்லைகள் குறிபிடத்தக்களவு சீர்செய்யப்பட்டதுடன் தகவல் திரட்டும் நடவடிக்கைகளை தொடருமாறு கிராம சேவகர்கள் பணிக்கப்பட்டிருந்தனர்.

எது எவ்வாறாயினும் நில அளவைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் இன்னும் குறிப்பிட்ட கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகள் உள்ளவாறாக இற்றைப்படுத்தப்படவில்லை எனவும் புள்ளிவிபர திணைக்களத்தால் போலியான நில அளவை படங்களே தயார்செய்து வழங்கப்பட்டுள்ளதாகவும், அது மட்டுமன்றி கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு தனியான பிரதேச செயலாளர் பிரிவாக புள்ளிவிபர திணைக்களத்தால் வர்த்தமானிப் படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு பிரதேச செயலகப் பிரிவை ஒரு உப பிரதேச செயலாளர் பிரிவாக கணக்கெடுப்பை நடத்த திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுமக்களால் இத்தகவல் திரட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துதெரிவிக்கையில் புள்ளிவிபர திணைக்களத்தின் இச்செயற்பாடுகள் எமது மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடு எனவும் எமது பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவத்தில்லையெனவும் தெரிவித்துள்ளதோடு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் நில அளவைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வரைபடத்தை சீர்செய்து இந்நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், அமைச்சரவை அனுமதியுடன் பிரதேச செயலகமாக 35 வருடங்களாக இயங்கிவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை “உப” எனும் பதத்தை சட்டரீதியற்ற (Unlawful) விதத்தில் பயன்படுத்தும் அம்பாரை மாவட்ட அரச அதிபருக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறலாமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.