மட்டக்களப்பு பிரதேச அறிஞர்களைக் கண்டுபிடித்து எமக்கு வெளிக்காட்டிய பெருமைக்குரியவர்.

ஓய்வுநிலை பேராசிரியர் செ.யோகராசா
(கனகராசா சரவணன்)
 தமிழ்கூறும் நல்லுலகின் அமைதியான ஓர் ஆளுமை, கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியர் செ.யோகராசா இன்று வியாழக்கிழமை (07) கொழும்பில்  இறைவனடியில் இளைப்பாறுதலடைந்தார்.

யாழ் வடமராச்சி  கரணவாய் கிராமத்தில் பிறந்து, தலவாக்கலையில் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்து, மட்டக்களப்பில் வாழ்ந்து வந்தவர்..

1991இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில், மொழித்துறை விரிவுரையாளராக இணைந்து, 2009இல் பேராசிரியராக நியமனம் பெற்றவர். 2014 இல் 23 வருட பல்கலைக்கழக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அவர் ஒரு அயர்ச்சியின்றி இயங்கும் ஒரு இலக்கியப் பேராசிரியர் ஆவார்.

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் காலாண்டுச் சஞ்சிகையாக 1982முதல் வெளியிடப்பட்டுவரும் ‘கிழக்கொளி’யின் ஒவ்வொரு பதிப்பிலும், மட்டக்களப்பு பிரதேச அறிஞர்களைக் கண்டுபிடித்து எமக்கு வெளிக்காட்டிய பெருமைக்குரியவர்.

மிகவும் நிதானமாக ஆராய்ந்து செய்யற்படும் குணாதிசயம் உடையவர்  விமர்சனங்களை பண்பாடாகவே முன்வைப்பவர். எளிமையாக பழகும் சுபாபமே அவரது வலிமையாகும்.  அவர் சந்தித்த எல்லாவித நெருக்கடிகளுக்கும் மத்தியில் தனது இலக்கிய பணியையும், கற்பித்தல் பணியையும் தளராது முன்னெடுப்பவர்.
நல்ல இலக்கியங்களை ஆழ்ந்து ரசிப்பவர். விரிந்த தேடலும் பரந்த வாசிப்பும் அவரது  விருப்புகளாகும். பேராசிரியர் இயல்பாகவே மென்மையான மனிதர். உரத்துப் பேசாதவர். ஏத்தகைய கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் எல்லோருடனும் இனிமையாகப் பேசி நல்லுறவைப் பேணும் பண்பாளர். முகம் முறியப் பேசி அறியாதவர்.

பல சர்வதேச நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, பல ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சியில், குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர்,

இவர் பெற்ற சில விருதுகளும் கௌரவங்களும்
1990இல் ‘சிறந்த ஆசிரியருக்கான விருது’

1999இல்  ‘பேராசிரியர் சு.வித்தியானந்தன் விருது ‘ (கலாநிதிப் பட்ட ஆய்விற்காக )

2007இல் ‘தேசிய சாகித்திய விருது’ 2011இல் ‘கலை வாருதி விருது ‘
2013இல் ‘ தேனகக் கலைச்சுடர் விருது ‘ 2014இல் ‘நிறைத் தமிழ் விருது ‘

இவர் எழுதி வெளியிட்ட நூல்களில் சில
————-
ஈழத்து தமிழ் நாவல் வளமும் வளர்ச்சியும், இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள், ஈழத்து நவீன கவிதை, புதிய உள்ளடக்கங்கள், புதிய தரவுகள், புதிய போக்குகள், ஈழத்து முச்சந்தி இலக்கியம் , ஈழத்து இலக்கியமும் இதழியலும் (ஆய்வு நூல் ) பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஆய்வு நூல் ) ஈழத்து இலக்கியமும் இதழியலும்

தொகுப்பு நூல்கள்
ஈழத்து வாய்மொழிப் பாடல். மாற்று நோக்கில் சில கருத்துக்களும், நிகழ்வுகளும். புதுத் தளிர் நூறு. ஈழத்து சிறுவர் இலக்கியக் களஞ்சியம். ஈழத்து சிறுவர் பாடல் களஞ்சியம். ஈழத்து சிறுவர் கதைகள். (அம்மாவைத் தேடிய ) ஈழத்து நவீன இலக்கியங்கள் படைப்பாளர்கள் -தடங்கள். சுவாமி விபுலானந்தர் பன்முகப் பார்வை, பன்முகப் பார்வையில் சுவாமி விபுலானந்தர்

சிறு பிரசுரங்கள்–இலக்கியத் தேட்டம் : ஈழத்து நவீன இலக்கியம், ஈழத் தமிழ்ச் சூழலில் நவீன மாயக்கமும், அதன் வெளிப்பாடுகளும், புலம் பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமாராச்சியின் பங்களிப்பு. ஈழத்து நவீன உருவாக்கத்தில் மண்டூர் பாரதியின் பங்களிப்பு. ஈழத்து தமிழியல் சார் தமிழ் ஆய்விதழ்கள். சுவாமி விபுலானந்தரும், ஆறுமுக நாவலரும். ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் வ.இ.இராசரெத்தினத்தின் தடங்கள். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சி. மௌனகுருவின் தடங்கள். சங்க காலம் முதல் சமகாலம் வரை பேராசிரியர் சி. மௌனகுருவுடனான நேர் காணல், ஈழத்து நவீன இலக்கிய உருவாக்கத்தில் பெண் ஆளுமைகள், தேடல்கள் ஊடாக பல வெளிப்படுத்தல்கள் இன்னும் பல…

இவ்வாறாகத் தமிழ் இலக்கியத்தின், சிறப்பாக ஈழத் தமிழ் இலக்கியத்தின் வரலாறு திறனாய்வு, நாட்டாரியல், சிறுவர் இலக்கியம், பெண்கள் இலக்கியம் முதலான பல்வேறு துறைகளிலும் புகுந்து ஆய்வறிந்த அனுபவங்களையும், தேடிக் கண்ட அனுபவங்களையும்,  தகவல்களையும் நூல்களாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டு செம்மொழியாம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் ஓய்வு நிலைப் பேராசிரியர் செ. யோகராசா பல்கலைக்கழக பணியில் இருந்து ஓய்வுபெற்று 09 வருடங்கள் கடந்திருந்தாலும் , கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் பட்டதாரி மாணவர்களுக்கும் , பட்டப்பின் படிப்பு மாணவர்களுக்கும் தமிழ், இலக்கிய அறிவூட்டிக்  கொண்டிருக்கின்றார்.

பேராசிரியர் யோகராசா அவர்கள் கிழக்கிலங்கை மக்களுக்கு ஆற்றிய, ஆற்றிக் கொண்டிருக்கும் இலக்கியப் பணி மகத்தானது, மறக்கமுடியாதது. பேராசிரியரது சேவைகளுக்கு, இவரது துணைவியாரும், ஏக புத்திரியும் பக்கபலமாக இருப்பது எமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது .

அவர் சுகயீனம் காரணமாக திடீரென இன்று உயிரிழந்துள்ளார்.