இந்த நாட்டில் தொடர்ச்சியாக எமது தமிழ் இளைஞர்கள் ஒரு அச்ச உணர்வுடன் வாழ முடியாது. அவர்களும் இந்த நாட்டின் பிரஜைகள். அவர்களுக்கும் தன் இனம், சமூகம் சார்ந்த உணர்வுகள் இருக்கின்றது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை சுதந்திரமாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு இந்த நாட்டின் அனைத்து அரசியற் தலைவர்களுக்கும் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் பாராளுமன்றில் சக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பிலான பிரேரணை மீதான உரையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடே பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்தப் பிரேரணையைச் சமர்ப்பித்திருக்கின்றார். கடந்த வாரத்தில் இந்த நாட்டின் இராணுவத்தினரும், பொலிசாரும் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்தால் இந்த நாட்டில் தொடர்ந்து பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும், ஒரு சமூகம் தொடர்ச்சியாக அடக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே தான் செயற்பட்டதாகத் தெரிகின்றது.
இந்த நாட்டில் ஒரு பாரிய யுத்தம் இடம்பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் 2009உடன் மௌனிக்கப்பட்டார்கள். இந்த யுத்தத்திலே பல உறவுகள் காவுகொல்லப்பட்டனர். இறந்த அந்த உறவுகளை நினைந்து கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி வருவதை நாங்கள் அனைவரும் அறிவோம். மரணித்தவர்களுக்காகச் செய்கின்ற சடங்குகளைக் கூட தடைசெய்கின்ற ஒரு சட்டமாக இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் இருக்கின்றது.
நாங்கள் இந்த நாட்டிலே சிங்கள மக்களோடு சமத்துவமாக வாழ வேண்டும் என்றே இருந்தோம். ஆனால் 1983, 1987ம் ஆண்டுகளில் இடம்பெற்ற இனக்கலவரங்கள், 2009ம் ஆண்டில் இடம்பெற்ற இறுதி யுத்தம் என்பவற்;றின் போது அழிவைச் சந்தித்தவர்கள் யார் என்பதை நீங்கள் உணர வேண்டும். இன்னும் இந்த அழிவின் வடுவில் இருந்து எமது மக்கள் மீளவில்லை. நாங்கள் இன்னும் இன்னும் பாதிக்கப்பட்ட இனமாகவே இருந்து கொண்டிருக்கின்றோம்.
இன்றும் கூட தொடர்ச்சியாக இந்த இராணுவத்தினரும் பொலிசாரும் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி எமது இளைஞர்களை சுதந்திரமாக உளாவ விடாத சூழ்நிலையைத் தோற்றுவிக்கவே விரும்புகின்றார்கள். அவர்களுக்கு இந்த நாட்டிலே பிரச்சனை வேண்டும். ஆனால் எங்களுக்கு அவ்வாறு இல்லை.
ஒரு நீதிமன்றத்தில் நினைவேந்தல்களை முன்னெடுக்க முடியும் என்ற ஆணை வழங்கும் போது இன்னுமொரு நீதிமன்றம் அதற்கு எதிரான ஆணையை வழங்குகின்றது. இந்த நாட்டில் என்ன சட்டங்கள், எத்தனை சட்டங்கள். சட்டத்தை ஒரு முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இங்கு பொலிசாரும் இராணுவத்தினரும் பிரச்சனையை வளர்;க்கின்றவர்களாக, பிரச்சனைகளை உருவாக்குகின்றவர்களாகவே செயற்படுகின்றார்கள். இந்த நிலையில் மாற்றம் வர வேண்டும். இந்தப் பயங்கரவாத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்ற இளைஞர்கள் விடுவிக்கப்பட்டு இந்த நாட்டில் ஒரு சமாதானம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
இந்த நாட்டில் தொடர்ச்சியாக எமது தமிழ் இளைஞர்கள் ஒரு அச்ச உணர்வுடன் வாழ முடியாது. அவர்களும் இந்த நாட்டிலே பிறந்த பிரஜைகள். அவர்களுக்கும் சமூகம் சார்ந்த இனம் சார்ந்த உணர்வுகள் இருக்கின்றது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை சுதந்திரமாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு இந்த நாட்டிலுள்ள அனைத்து அரசியற் தலைவர்களுக்கும் இருக்கின்றது என்று தெரிவித்தார்.