திறனையும் மனப்பாங்கையும் விருத்தி செய்ய பாடசாலைகள் முன்வர வேண்டும்

சமூக சவால்களுக்கு முகங்கொடுக்க கூடிய ஆளுமையுள்ள பிள்ளைகளை சமூகத்திற்கு அனுப்புவதே பாடசாலையின் நோக்காகும். இந்நோக்கத்தை அடைவதற்கு புத்தகத்தில் இருக்கின்ற விடயங்களை மாத்திரம் ஒப்புவிக்கின்ற அறிவுள்ளவர்களால் மட்டும் சாத்தியமாகாது. இதனை சாத்தியப்படுத்த பாடசாலையில் இணைப்பாடவிதானத்தை பாட விதானத்திற்கு சமமாக கொண்டு செல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்வதற்கு பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இன்னமும் முழுமையாக தயாராகவில்லை என்பதும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். இதற்கு காரணம் தேசிய பரீட்சைகளுக்கு குறிப்பாக பாடங்களை கற்று அதனை ஒப்புவிக்கின்ற கல்வி முறைமைக்கே அதிகம் முக்கியத்துவம் வழங்குவதினால் இணைப்பாட விதான செயற்பாட்டில் எல்லோரும் பங்களிப்பது குறைவாகவே இருக்கின்றது.
பாடசாலை நேரத்தில் பாடவிதானங்களுக்கே நேரசூசி வழங்கப்பட்டுள்ளமையினால் ஆசிரியர்களும் தங்களுக்குரியதான நேரத்தில் கற்பித்தலை மட்டும் மேற்கொண்டு சென்றுவிடுவோம் என எண்ணுகின்றனர். இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான பயிற்சிகளை பாடசாலை நிறைவுபெற்றதன் பின்னர் அல்லது வார இறுதிநாட்களிலேயே வழங்க வேண்டிய நிலை இருப்பதினால் ஆசிரியர்களின் பங்களிப்பும் மிகக்குறைவே. இச்செயற்பாடு மாணவர்களின் திறன், மனப்பாங்கு என்பவற்றில் குறைந்தளவிலான விருத்தி நிலையே ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய பல இணைப்பாட விதான செயற்பாடுகள் இருக்கின்றன. இவற்றை பாடசாலைகள் முழுமையாக செய்வதற்கு பாடசாலை நேரத்திலும் இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கான நேரசூசி திட்டமிடப்பட வேண்டும் என்பது பலரது கருத்தும் கூட.
மாணவர்கள் அனைவருமே திறமையானவர்கள. அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கேற்ற செயற்பாடுகளைத்தான் பாடசாலைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தில் தேர்ச்சி உடையவர்களாக இருப்பர். அவ்வாறு தேர்ச்சி கொண்டவர்களை இன்னும் இன்னும் உற்சாகப்படுத்தி அதில் உயர்தேர்ச்சியை அடைய செய்வதன் ஊடாக சிறந்த பயனைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், எதிர்கால தொழில் உலகிற்கும், சவால்களுக்கும் முகம் கொடுக்க கூடிய நிலையை மாணவர்கள் பெற்றுக்கொள்வர்.
மாணவர்கள் சிலர் சாதாரண தரத்தில் சித்தியடையாது அல்லது உயர்தரத்தில் சித்தியடையாது சமூகத்திற்குள் செல்லலாம். ஆனால் அவ்வாறான மாணவர்கள் திறனற்றவர்களாக வெளியில் செல்வதுதான் ஆபத்தானது. அவ்வாறு செல்வதென்பது பாடசாலைவிடும் தவறு என்று கூட கூறமுடியும். ஏன்னெனில் தரம் 1 தொடக்கம் 11வரை கற்ற மாணவரின் திறனை மனப்பாங்கை பாடசாலை அறிந்து கொள்ளவில்லை என்பதினாலேயே திறனற்ற மாணவர்கள் சமூகத்திற்குள் செல்கின்றனர். அவ்வாறின்றி அச்சமூகத்தில் வாழ்வதற்கு நிலைத்திருப்பதற்கு ஏற்ற திறனை பாடசாலைகள் இனங்கண்டு செய்ய வேண்டும். இதற்காக பாடசாலைகள் புதிய புதிய கோணத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வேலைத்திட்டங்கள் பழையதாக இல்லாமல் புத்தாக்க சிந்தனை கொண்டதாக இருப்பதோடு, சமூகத்திலும் இது தொடர்பிலான ஆய்வுகளை நடாத்தி அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டும். இதன்மூலம் சிறந்ததொரு ஆளுமையுள்ள சமூகத்தினை உருவாக்க முடியும்.
புத்தாக்க சிந்தனையுள்ள அதிபர், ஆசிரியர்களினால்தான் அனைத்தையும் சாத்தியமாக்க முடியும். எந்தொரு புதிய செயற்பாட்டின் போதும் மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்வதினால் எதையும் சாத்தியமாக்கி கொள்ள முடியாது. சாத்தியப்படுத்தலை மேற்கொள்வதற்கு நேரான பார்வையும் நேர்சிந்தனையும் வேண்டும். உடனடியாக வெற்றி பெற்றுவிட்டால் அவ்வெற்றிக்கான மதிப்பு குறைவாகவே இருக்கும். பல தோல்விகளை கடந்து பெறும் வெற்றிக்கு பெரும் மதிப்பு இருக்கும். இது யாதார்த்தமான உண்மை. அதேபோன்று பாடசாலையில் முன்னெடுக்கப்படும் புத்தாக்க செயற்பாடுகள் பல்வேறு காரணிகளால் குறிப்பாக வளத்தேவை, மனப்பாங்கு, அர்ப்பணிப்பு போன்ற செயற்பாடுகளினால் தோல்வியை தழுவலாம். ஆனாலும் தோல்வி அடைந்தமைக்கான காரணங்களை இனங்கண்டு அவற்றினை சரிப்படுத்தி கொள்கின்ற போது வெற்றியை அடையலாம்.
மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் ஆகியோர் இணைக்கின்ற போது தரமான மாணவர் சமூகத்தினை உருவாக்க முடியும். பாடசாலைகள் இதற்காக செயற்பாடுகளை திட்டமிட வேண்டும்.