உண்மையான பௌத்தர்களாகிய நாம் நாட்டையும் நாட்டு மக்களையும் போதைப்பொருள் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தினூடாக சம்புத்த சாசனம் பாதுகாக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அது நடைமுறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும்,பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் உண்மையான போதனைகளின் அடிப்படையில் நடைமுறை ரீதியான பௌத்த விழுமியத்தைக் கட்டியெழுப்புவது காலத்தின் தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள மத வழிபாட்டுக் கட்டமைப்பைப் பாதுகாத்து அதன் மூலம் கலாசாரத்தைப் பாதுகாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாகும் என்றும்,மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது போலவே ஒவ்வொரு கிராமம் பூராகவும் பரவியுள்ள மது, புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையையும் ஒழிக்க வேண்டும் என்றும், உண்மையான மக்கள் சமூகமாக திகழ  வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தந்திரிமலை ரஜ மஹா விகாரையில் வருடாந்த கடின பின்கம புன்னிய உற்சவ நிகழ்வில்  (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதை பிசாசு பாடசாலை மாணவ சமூகத்தை கூட வேகமாக ஆட்கொண்டுள்ளதாகவும்,இவ்வாறான வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசின் பேரில் கிராமம் நகரம் தோறும் சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் பியர் உரிம பத்திரங்கள் வழங்குவது வருந்தத்தக்க விடயம் என்றும்,அரசாங்கத்தின் மீதும் அழுத்தம் கொடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சிகரெட் மற்றும் மது விநியோகம் செய்கின்றன என்றும்,சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் மேலே செல்லும் இந்த பெரும் மாபியா சக்தி இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முப்பது வருடகால யுத்தத்தினால் நாடு பாதிக்கப்பட்டது போன்று போதைப்பொருள் பயங்கரவாதத்தினால் தற்போது பாதிக்கப்பட்டு வருவதாகவும்,இதிலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது அன்புக்குரிய பாரியார் திருமதி ஜலனி பிரேமதாச ஆகியோரின் புன்னிய உபகாரத்தில் தந்திரிமலை ரஜ மஹா விகாரையில் வருடாந்த கடின புன்னிய உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.