வாகரை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூபிகள் சேதமாக்கப்பட்டுள்ளது.

க.ருத்திரன்;.
மட்டக்களப்பு வாகரை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூபிகள் நேற்று இரவு (24) இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக மாவீரர்களின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு மாவடடத்தின் பல்வேறு இடங்களில் மாவீரர் துயிலும் இல்லங்களில் துப்பரவு நடவடிக்கைககள் மற்றும் ஆயத்த நடவடிக்கைகள் மாவீரர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் நேற்று இரவு இனம் தெரியாத நபர்கள் கண்டலடி வாகரை துயிலும் இல்ல வளாகத்திற்குள் நுழைந்து அங்கு ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் நினைவு தூபிகள்,வேலிகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சிகப்பு,மஞ்சள் கொடிகள் போன்றவற்றை சேதப்படுத்தி சென்றுள்ளதாக கவலை தெரிவித்தனர்.
எனவே குறித்த சம்பவத்தினை மேற்கொண்டவர்கள் ஏன் இரவில் வந்து இவ்வாறான  கேவலமான செயல்களை செய்கின்றனர்.இது ஒரு குழப்பத்ததை ஏற்படுத்தும் நடவடிக்கையாக கருதவேண்டியுள்ளது.அத்துடன் வடக்கு கிழக்கில் உள்ள சகல மாவீரர் இல்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறது.இதனை பிடிக்காதவர்கள் நேரில் வந்தோ அல்லது நீதி மன்ற சட்ட நடவடிக்கை தொடர்பாக எடுத்துக் கூறி  தடை செவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளலாம்.அதனை விடுத்து இவ்வாறான குழப்பத்தை ஏற்படுத்தி பயமுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதனை கைவிட வேண்டும் என்றும் எதிர்பார்த்தது போன்று எதிர்வரும் 27 ஆம் திகதியன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என ஏற்பாட்டுக் குழுவினர் ஊடகங்கள் வாயிலாக தகவல் தெரிவித்தனர்.
அண்மையில் கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட பொதுச் சுடர் ஏற்றும் நினைவுத் தூபியானது தங்களது வனப் பகுதிக்குள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை அகற்றக்கோரி வன இலகா திணைக்களத்தினர் வாழைச்சேனை நீதி மன்றில் மேற்கொண்ட தடை உத்தரவின் பேரில் நீதி மன்ற அனுமதியுடன் அது அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.