ஆயுள்வேத மத்திய மருந்தகம் மக்கள் பாவனைக்கு

அபு அலா –
கிழக்கு மாகாண (PSDG) நிதியின் கீழ் 14.5 மில்லியன் ரூபாவில் சம்மாந்துறை – மல்வத்தையில் நிர்மாணிக்கப்பட்ட ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (18) திறந்து வைத்து மக்கள் பாவனைக்கும் கையளித்து வைத்தார்.
ஆயுள்வேத வைத்தியசாலைகளின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள்,
சம்மாந்துறை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்முனை பிராந்திய ஆயுள்வேத வைத்தியசாலைகளின் வைத்திய பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
மேலும், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.