கல்முனை மாநகர சபையின் வேலைத் திட்டங்களில் அரசியல் தலையீடு கிடையாது.

(ஏ.எஸ்.மெளலானா)   கல்முனை மாநகர சபையின் வேலைத் திட்டங்களில் எந்தவொரு அரசியல் தலையீடும் கிடையாது என்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
கல்முனை மாநகர பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற நவீன வசதிகள் கொண்ட மலசல கூடத் தொகுதியானது நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் விரிவுபடுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் மாநகர சபையின் பங்களிப்புடன்  தற்போது துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
தேசிய பத்திரிகையில் திறந்த விலைமனுக் கோரல் செய்யப்பட்டு, உரிய கேள்வி நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, இவ்வேலைத் திட்டத்திற்கான ஒப்பந்தக்காரர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
மாநகர சபையினால் இவ்வாறான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றபோது சுயாதீனமாகவும் வெளிப்படைத் தன்மையுடனுமே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இடம்பெறுவதில்லை என்பதை பொது மக்களுக்கு உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிலையில் மேற்படி மலசல கூடத் தொகுதி நிர்மாணம் உள்ளிட்ட வேலைத் திட்டங்கள் மற்றும் நிர்வாக விடயங்களில் சிலர் விசமத்தனமானதும் உண்மைக்குப் புறம்பானதுமான தகவல்களை சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகின்றமை தொடர்பாக எனது அவதானத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் குறித்த நபர்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.
மேலும், கல்முனை மாநகர சபையின் சேவைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் உள்ளிட்ட எந்த விடயமாயினும் உண்மையான தகவல்களை அறிய விரும்புவோர் அலுவலக நேரங்களில் நேரடியாக வருகைதந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் அறியத் தருகின்றேன்- என்றார்