( வாஸ் கூஞ்ஞ) மன்னார் வேதசாட்சிகளாக மரணித்துள்ள கத்தோலிக்கர்களை புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் என மன்னார் ஆயர் தலைமையில் திரட்டப்பட்ட வேதசாட்சிகளின் ஆதாரங்களை மன்னார் ஆயர் மேதகு லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை வத்திக்கானில் திருத்தந்தையிடம் ஒப்படைத்துள்ளார்.
மன்னார் பட்டித்தோட்டத்தில் வசித்து வந்த 600 க்கு மேற்பட்ட கத்தோலிக்கரை கத்தோலிக்க மதத்தை கைவிட வேண்டும் எனக் கோரப்பட்டும் அவர்கள் அதற்கு இசையாமையால் கொலை செய்யப்பட்டு வேதசாட்சிகளாக மரித்த இவர்கள் மரணித்து 480 வருடங்களை எட்டியுள்ளது.
இவர்களை புனிதர் வரிசையில் சேர்க்க வேண்டும் என மன்னார் மறைமாவட்டம் பல ஆய்வுகளை மேற்கொண்டதுடன் இவர்களுக்காக செபித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயரால் திருத்தந்தையின் கவனத்துக்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டதுடன் இவர்களின் ஆதாதாரங்களை பல கோணங்களிலும் கடந்த சில வருடங்களாக திரட்டப்பட்டும் வந்தது.
இது தொடர்பாக திருத்தந்தை அவர்கள் போலாந்து நாட்டைச் சேர்ந்த அமல மரி தியாகி சபையைச் சார்ந்த அருட்பணியாளர் ஒருவரையும் இது தொடர்பாக ஆய்வு செய்யவும் நியமித்துள்ளார் என மன்னார் மறைமாவட்ட ஆயர் வட்டாரம் தெரிவித்துள்ளது.
600 க்கு அதிகமான ஆண்கள் , பெண்கள் , சிறியோர் மற்றும் முதியோர் என்ற வேறுபாடின்றி கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களை வேதசாட்சிகளை புனித நிலைக்கு உயர்த்துவதற்கான ஆதாராங்களை திரட்டிய மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை வருடத்தில் ஒருமுறை இலங்கை ஆயர்கள் ஒன்றித்து திருத்தந்தையை சந்திக்கச் சென்றிருந்த பொழுது திருத்தந்தையிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கையளிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (10) வத்திக்கானில் நடைபெற்றதாகவும் மன்னார் மறைமாவட்ட அயர் இல்லம் தெரிவித்துள்ளது.