(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) அரசாங்கத்தினால் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசாங்கத்தின் நவம்பர் மூன்றாம் திகதிய அதி விசேஷமான வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க, 2003 ஆம் ஆண்டின் ஒன்பதாம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டம் (திருத்தியமைக்கப்பட்டது) 20 (5) ஆம் பிரிவின் கீழான கட்டளையின் கீழ் சீனிக்கான ஆகக்கூடிய கட்டுப்பாட்டு விலையை விதித்து அதற்கிணங்க சீனி வியாபாரத்தில் ஈடுபடுமாறு அறிவித்துள்ளது.
அதன்படி, சீனி ஒரு கிலோகிராம் ஆகக் கூடுதலான சில்லறை விலையாக வெள்ளை சீனி பொதிசெய்யப்படாத நிலையில் 275.00 ரூபாவிற்கும், பழுப்பு அல்லது சிவப்பு சீனி 330.00 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமெனவும், அதேவேளை பொதிசெய்யப்பட்ட நிலையில் வெள்ளை சீனி 295.00 ரூபாவிற்கும், பழுப்பு அல்லது சிவப்பு சீனி 350.00 ரூபாவிற்கும் விற்கப்பட வேண்டும்.
குறித்த ஆகக்கூடிய சில்லறை விலைக்கு அதிகமாக சீனி இறக்குமதியாளர், உற்பத்தியாளர், விநியோகத்தர், வழங்குநர் அல்லது வியாபாரி எவருமோ விற்பனை செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் பிரதேசத்தில் (7) திகதி இடம்பெற்ற சுற்றிவலைப்பின் போது 12 வியாபார நிலையங்களில் சுற்றிவலைப்பில் ஈடுபட்டுள்ளதுடன், அதில் 6 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவற்றில் தலா 2 வியாபாரிகள் சீனியை அதிகரித்த விலையில் விற்றகாகவும், சீனியின் விலையை காட்சிப்படுத்தவில்லை என்றும், கீறி சம்பா அரிசியை அதிக விலையில் விற்றமைக்காகவும் இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.