(தலவாக்கலை பி.கேதீஸ்) நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை அதிகாரிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அறிவுறுத்தல்களை முறையாக நடைமுறைப்படுத்தாத அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் துரிதமாக செயற்பட வேண்டுமெனவும், நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் எந்தவொரு வேலைத்திட்டத்திற்கும் இடமளிக்க மாட்டோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று முன் தினம் சனிக்கிழமை (04) இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா மாவட்டத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சிகரமான மற்றும் வசதியான சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை அளிக்கும்.
மேலும், சுற்றுலாத்துறைக்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், அரசு அதிகாரிகள் தங்களது பொறுப்புகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பது, வீதிகளை சீரமைத்தல், குடிநீர்ப் பிரச்னைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ள விரைவான நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் குறித்த உண்மைகளை அலுவலர்கள் இங்கு விளக்கினர். அத்துடன் அந்த வேலைத்திட்டங்களை அமுல்படுத்தும் போது ஏற்பட்ட பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, காஞ்சன விஜேசேகர, ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். பி. திசாநாயக்க, வி. ராதாகிருஷ்ணன், எம். ராமேஸ்வரன், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகே, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட மற்றும் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
|