கனரக வாகன இயக்குனர் பயிற்சி நெறியை நிறைவு செய்த மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) கனரக வாகன இயக்குனர் பயிற்சி நெறியை நிறைவு செய்த மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக நடாத்தப்பட்ட இப்பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று (03) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக   மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பணிப்புரையின்  கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனம் ஒரு மாத கால இப் பயிற்சி நெறியை மேற்கொண்டிருந்தது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவில் தொழிலின்றி காணப்படும் இளைஞர்களின் தொழில் வாய்ப்பை   அதிகரிப்பதற்காக அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனம் ஊடாக இக் கற்கை நெறி மாவட்ட செயலகத்தின் நெறிப்படுத்தலின்கீழ் நாடாத்தப்பட்டது.

இக் கற்கை நெறியினை பூர்த்தி செய்பவர்களுக்கு மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட  பெறுமதியான சான்றிதழ்கள் இதன்போது பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால்  வழங்கி வைக்கப்பட்டது.

கனரக வாகன இயக்குனர்களுக்கான  கற்கை நெறிகள் வெளிமாவட்டங்களில் இடம் பெற்று வரும் நிலையில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பணிப்புரையில் மட்டக்களப்பு  திருப்பெருந்துறையில்  இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது கருத்து தெரிவித்த கனரக வாகன இயக்குனர்கள்,  இப் பயிற்சி நெறியை வெளிமாவட்டங்களில் கற்பதாயின் அதிக பண செலவு மற்றும் மொழிப் பிரச்சினைகள் காணப்பட்டமையை சுட்டிக்காட்டியதுடன் தமது வாழ்வாதாரத்தை உயர்த்தியமைக்கு  இராஜாங்க அமைச்சருக்கு நன்றியினையும் தெரிவித்திருந்தனர்.

இந் நிகழ்வில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்பு செயலாளர் மாணிக்கவாசகர் தயாபரன்,  மண்முனை வடக்கு பிரதேச செயளாளர் வி.வாசுதேவன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் கே.சிவகுமார், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன்,  மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார், அம்கோர் நிறுவன பணிப்பாளர் பி.முரளிதரன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அரச சார்பற்ற அம்கோர் நிறுவனத்தின் ஆதரவுடன்  அவுஸ்ரேலியன் அரசாங்கத்தின் நிதி அனுசரனையில் இத்திட்டம் முன்னேடுக்கப்பட்டதுடன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் கடந்த மாதம் இப்பயிற்சி நெறி ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.