(டி.சந்ரு செ.திவாகரன்) மில்கோ தனியார் நிறுவனத்தின் தற்போதைய தலைவரை பதவி நீக்கம் மற்றும் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மதிய உணவு நேரத்தின் போது புதன்கிழமை (01) நுவரெலியா அம்பேவல மில்கோ பால் சேகரிப்பு நிலையம் தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது
இதில் பல தொழிற்சங்கம் ஒன்றினைந்தும் , நுவரெலியா அம்பேவல ஹைலேண்ட் மில்கோ நிறுவன பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இணைந்து மதிய உணவு இடைவேளையின் போதே இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மில்கோ நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதனால்தான் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியை குறைத்துள்ளது , தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு இழப்புக்கு அரசாங்கமே முழு பொறுப்பேற்க வேண்டும் , நிலுவைத் தொகை மற்றும் கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்க வேண்டும் என தெரிவித்தும் குறிப்பாக மில்கோ நிறுவனத் தலைவர் ரேணுகா பெரேராவை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு கோரியும் சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்பு தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்ப தற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியை குறைத்துள்ளதுடன் தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்பட்ட பாலை விலைக்கு வாங்காமல் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பாலைப் பெறும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. எனவே அரசாங்கம் மில்கோ நிறுவனத்தை நஷ்டமடையச்செய்து, அதனைக் காரணமாக காட்டி அந் நிறுவனத்தை விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தையே மேற்கொண்டு செல்கின்றது. இதனால் தேசிய பால் உற்பத்தியாளர்கள் பாரியளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் எனினும் அரசாங்கம் எங்களது போராட்டத்திற்கான தீர்வை வழங்காத பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் பாரிய தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்தனர்.