கொக்கட்டிச்சோலையில் சாதனை மாணவர் கௌரவிப்பும் சிறுவர் மகிழ் பொழுதும் மின்மினிகள் கவிதை நூல் வெளியீடும்

பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம் நடாத்திய சாதனை மாணவர் கௌரவிப்பும் சிறுவர் மகிழ் பொழுதும் மின்மினிகள் கவிதை நூல் வெளியீடும் அண்மையில் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களிடையே ஆக்கத்திறனை வளர்க்கும்பொருட்டு நடாத்தப்பட்ட கவிதைப் பயிற்சி பட்டறையில் கவிதைகளை எழுதிய மாணவர்களின் கவிதைகள் அடங்கிய மின்மினிகள் கவிதை நூல் இதன்போது வெளியிடப்பட்டது. இந்நூலின் முதற் பிரதியை கணக்காளர் திருமதி சந்திரகலா ஜெயந்திரா பெற்றுக்கொண்டார். நூலின் நயவுரையை கவிஞர் அரசையூர் பகீ நிகழ்த்தினார்.

மேலும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 2021 இல் க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் என்பவற்றிலும், தமிழ்த்தினம், விளையாட்டு என்பவற்றிலும் சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னம், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இம்மாணவர்கள் தமக்கான கௌரவத்தினை தமது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும் .

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலை மாணவர்களிடையே நடாத்திய விவாதப்போட்டியின் இறுதிப் போட்டியும் இடம்பெற்றது. இப்போட்டியில் குறித்த வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவர்களும் கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவர்களும் பங்குபற்றி கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவர்கள் வெற்றிபெற்றனர். இரண்டாம் இடத்தினை நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவர்களும் மூன்றாம் இடத்தினை மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயமும் நான்காமிடத்தினை கன்னங்குடா மகா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டனர். முதல் நான்கு இடங்களுக்கும் முறையே 15000, 10000, 5000, 3000 ரூபா பணப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஓய்வு நிலை மாகாணக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் குறித்த ஒன்றியத்தினரால் கல்விமாமணி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கலாநிதி த.மேகராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வுநிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி உசாந்தி துரைசிங்கம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் ந.குகதாசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.