(எச்.எம்.எம்.பர்ஸான்)
போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்த சம்பவத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் (27) மரணமடைந்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் வைத்து இந்த சம்பவம் கடந்த (15) ஆம் திகதி இடம்பெற்றது.
போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனது குழந்தையை தாக்கி தனக்குத்தானே தீ வைத்த போது அதனை தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தீ காயமடைந்தார்.
குறித்த நபர் தனது உடம்பில் பெற்றோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்த போது அதனை தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை கட்டிப்பிடித்துள்ளார்.
இச் சம்பவத்தில், தீக்காயங்களுக்குள்ளான நபரும் பொலிஸ் உத்தியோகத்தரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட ஒரு பிள்ளையின் தந்தையான 37 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.