மேச்சல் நிலம் இன்றி பாரிய பொருளாதாரத்தை இழக்கின்றோம். கால்நடை வளர்ப்போர் அரச அதிபருக்கு மகஜர்.

(வாஸ் கூஞ்ஞ)

மன்னாரில் மேய்ச்சல் நிலத்துக்காக மிக நீண்ட காலமாக பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எழுத்து மூலமும், நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பயனற்றுப் போயின. ஆகவே அதிகாரிகள் உடன் இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரி கால்நடை வளர்ப்போர் மகஜர் கையளித்துள்ளனர்

வியாழக்கிழமை (26) மன்னாரில் கால்நடை வளர்ப்போர் நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்தின்போது மன்னார் மாவட்ட செயலாளருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவித்திருப்பதாவது

மிக நீண்ட காலமாக பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எழுத்து மூலமும், நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கைவிடுத்தும் பயனற்றுப் போயின.

ஒவ்வொரு வருடமும் மாந்தை மேற்கு இலுப்பைக்கடவை பகுதிக்கு எமது கால்நடைகளைக் கொண்டு போய் பல்வேறு விதமான துன்ப துயரங்களையும் கால்நடை இழப்புக்களையும், மனித இழப்புக்களையும் சந்திக்க நேரிடுவதுடன் பாரிய பொருளாதார இழப்பையும் சந்திக்கின்றோம். அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் எமக்கும் முரண்பாடும் ஏற்படுகின்றன.

ஆகவே எமது கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான்கண்டல் பகுதியை மேச்சல் நிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பல வருடமாக கோரிக்கை விடுத்ததன் பிரகாரம் பலமுறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் நடைமுறைச் சாத்தியமாகவில்லை.

கடந்த 12.10.2023 அன்று  வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.

மேச்சல் தரவை நிலம் ஒதுக்குவது தொடர்பான விடயத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே புலனாகிறது.

எனவே உடனடியாக எமக்குரிய மேச்சல் நிலத்திற்கு முடிவுறுத்தாவிட்டால்; நாளை (29) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காலபோகக் கூட்டத்திற்கு எதிராக இடைமறித்து போராட்டம் நடாத்துவதுடன் இவ்வருடம் மாந்தை மேற்குப் பகுதிக்கு கால்நடைகளை கொண்டு போக மாட்டோம் என்பதையும் மிகவும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆகவே உடனடியாக எமது வேண்டுகையை நடைமுறைப்படுத்துமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறோம் என இவ்வாறு மன்னார் மாவட்ட செயலாளருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்க்பபட்டிரந்தது.