பாக்கு நீரினையினை நீந்திக் கடக்கவிருக்கும் மாணவர்களுக்கு மாவட்ட செயலகத்தினால் ஊக்குவிப்பு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

பாக்கு நீரினையினை நீந்திக் கடக்கவிருக்கும் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி சாரணிய மாணவர்கள் மூவரின் முயற்சியினைப் பாராட்டி ஊக்குவிப்பு அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தின் வேண்டுகோளின் பேரில் பெரேரா பிலான்மேட்  சேதன உரக்கம்பனியின் அனுசரணையில் இந்த ஊக்குவிப்பு தொகை இன்று(20)  மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

பெரேரா பிலான்மேட் சேதன உரக்கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுரங்க டீ சில்வாவின் ஆலோசனைக்கமைவாக இம்மாவட்டத்தில் விளையாட்டுத் துறையினை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்வாறான நலன்திட்டங்களை மாவட்ட செயலகத்தினூடாக தொடர்ச்சியாக வழங்க உள்ளதாக அந்நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ரவிச்சந்திரன் செல்லையா இதன்போது இணக்கம் தெரிவித்தார்.

இம்மாணவர்களான புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன்பிரிடோ, இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகியோர் எதிர்வரும் 23ஆந் திகதி இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து பாக்குநீரினையினை நீந்திக் கடந்து தலைமன்னாரை அடையவுள்ளனர். தற்பொழுது இவர்கள் கடந்த ஒருவாரகாலமாக மன்னார் கடலில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இம்மாவர்கள் இம்முயற்சியில் வெற்றிபெறுவதற்கான வாழ்தினையும், அவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகையினையும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், புனித மிக்கல் கல்லூரி சிரேஸ்ட சாரணிய மானவகளிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன், பெரேரா பிலான்மேட் சேதன உரக்கம்பனியின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள், புனித மிக்கல் கல்லூரி சிரேஸ்ட சாரணிய மானவகள் பலரும் கலந்து கொண்டனர்.