இஸ்ரேல் பாலஸ்தீன சமாதானம் தொடர்பில் கதைப்பதற்கு இலங்கை அரசுக்கு எவ்வித அருகதையுமில்லை

பா.உ கோ.கருணாகரம் ஜனா

(சுமன்)

2009ல் முள்ளிவாய்க்காலில் சொந்த நாட்டு மக்களையே கொத்துக் குண்டுகள் மூலம் பலியெடுத்த இலங்கை அரசு இஸ்ரேல் பாலத்தீனம் என்ற இரண்டு நாடுகள் போர் புரிகையில் உயிர்கள் மீது அக்கறை கொள்வதற்கு அருகதையற்றது. அன்று முள்ளிவாய்க்காலில் நடைபெறாத விடயமா இன்று மத்திய கிழக்கிலே நடைபெறுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் பாராளுமன்றத்திலே விசேடமாக ஒரு ஒத்திவைப்புப் பிரேரணை வந்திருக்கின்றது. மத்திய கிழக்கிலே இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கிடையில் கடந்த ஒரு வாரத்தித்திற்கும் மேலாக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று உலக நாடுகளிடமும், போர் செய்து கொண்டிருக்கும் அந்த இரு நாடுகளிடமும் கோரிக்கை வைக்கும் முகமாக அந்த ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டு வந்து விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த 14 வருடங்களிற்கு முன்னர் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற காலம் வரைக்கும் முள்ளிவாய்க்காலில் நடைபெறாத விடயமா இன்று மத்திய கிழக்கிலே நடைபெறுகின்றது. 14 வருடங்களுக்கு முன்னர் 7 சதுர கிலோமீட்டருக்குள்ளே ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை திறந்த வெளி சிறைச்சாலைக்குள் அடைத்து வைப்பதைப் போன்று வைத்து பொஸ்பரஸ் குண்டுகள், கொத்துக் குண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள் போன்றன மூலமாக அவர்களில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உயிர்களைப் பறித்தெடுத்து சொந்த நாட்டு மக்களையே பலியெடுத்த இந்த இலங்கை அரசு இஸ்ரேல் பாலத்தீனம் என்ற இரண்டு நாடுகள் போர் புரிகையில் உயிர்கள் மீது அக்கறை கொள்வது வேடிக்கையாகவே இருக்கின்றது.

நாங்கள் இந்தப் போரை விரும்புகின்றவர்கள் அல்ல. போருக்கு எதிரானவர்கள், மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எந்தவகையிலும் மனித உயிர்கள் பலியெடுக்கப்படக் கூடாது என்பதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இந்தப் போரை நிறுத்துவதற்காக உலக நாடுகளிடம் இதைக் கேட்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு எவ்வித யோக்கிதையோ, அருகைதையோ, தார்மீக உரிமையோ இல்லை.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் மக்கள் கடத்தப்படுகின்றார்கள், அவர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள் அது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று கூறும் இலங்கை அரசாங்கம் இறுதி யுத்தத்தின் போது உறவுகளினால் கையளிக்கப்பட்டு இன்று காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகள் பற்றி எதுவுமே சொல்லவில்லை. அந்த கையளிக்கப்பட்ட உறவுகள் கூட படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

இன்று கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அன்று கையளிக்கப்பட்டவர்களின் உடலங்கள் இருக்கலாம் என்ற சந்தேகமும் இருக்கும் போது இஸ்ரேல் பலஸ்தீன யுத்த விடயங்கள் பற்றிக் கதைப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு எவ்விதமான அருகதையும் இல்லை.

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையே நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும். அங்கு மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இந்த விடயத்தைப் பற்றிக கதைப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு எந்த வித யோக்கிதையும் இல்லை என்பதே எங்கள் கருத்து.

2009ல் அத்தனை உயிர்களையும் பலியெடுத்துஇன்றுவரை இந்த இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வைக் காணாமல் மனித உயிர்களுக்கு மேலாக வடகிழக்குப் பிரதேசங்களை பௌத்த மயமாக்கி இங்கு சிங்களவர்கள்தான் ஆதியில் இருந்து வாழ்ந்தார்கள் என்ற விடயத்தை உறுதிப்படுத்துவதற்காகக் கங்கனம் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசு இஸ்Nருல் பாலஸ்தீனத்தில் சமாதானம் வேண்டும் என்று கேட்பது வேடிக்கையானது மாத்திரமல்லாமல் அருகதையற்றது என்று தெரிவித்தார்.