மட்டக்களப்பில் ஆசிரியர் ஒருவரால் 5ம் ஆண்டு பரீட்சையில் மாணவர்களுக்கு இடம்பெற்ற அநீதிக்கு நீதிவேண்டும் பெற்றோர் கோரிக்கை-

( க.சரவணன்)

மட்டக்களப்பு கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் போது அங்கு கடமையாற்றிய சகோதர இனத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பிழையாக வினாக்களை தெரிவித்ததுடன் வலுகட்டாயமாக அந்த வினாக்களை சில மாணவர்களின் வினாத்தாளில் உள்ளீடு செய்து பிள்ளைகளின் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது எனவே அநீதிக்கு நீதிவேண்டும் என  பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குறித்த படசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) திகதி 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.  இதில் 20 மாணவர்கள் கொண்ட ஒரு பரீட்சை மண்டபத்தில் வேறு பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பரீட்சை கடமையை பெறுப்பெற்று கடமையாற்றி வந்த நிலையில் அவர் அங்குள்ள மாணவர்களிடம் யார் அதிக புள்ளிகளை எடுப்பவர் என வினாவியுள்ளார்.

இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு உதவுவது போல பரீட்சை வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கு விடை தெரிவிப்பதாக பிழையான விடைகளை தெரிவித்ததுடன் சுமார் 8 மாணவர்களின் வினாத்தாளில் அவர்கள் கோடிட்ட விடைகள் பிழையென தெரிவித்து அந்த வினாத்தாள்களில் ஆசிரியர் வலுக் கட்டாயமாக தனது கையால் பிழையான விடைகளுக்கு கோடிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் என்ன செய்வது என தெரியாது மனகுழப்பமடைந்த நிலையில் பரீட்சை நேரம் முடிவடைந்து வினாத்தாள்களை வாங்கி கொண்டனர்.

இதன் பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவர்கள் தமது பெற்றோருக்கு தாங்கள் பரீட்ச்சை வினாத்தாளில் கேட்ட கேள்ளிகளுக்கு சரியாக விடைகளையளித்த நிலையில் அங்கு கடமைக்கு வந்த ஆசிரியர் பிழையாக விடைகளை தெரிவித்ததாக தங்களுக்கு நடந்த அநீதியை தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து நேற்று புதன்கிழமை (18) பாடசாலை அதிபர் அந்த மண்டபத்தில் பரீட்சைக்கு தோற்றிய 20 மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து  விசாரணையின் பின்னர் இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்பதாகவும்  மேலதிகாரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும் இந்த பிரச்சனைக்கு ஒருவார கால அவசம் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த சம்பவம் இடம்பெற்ற 3 தினங்கள் ஆகிய நிலையில் இந்த பிள்ளைகளுக்கு இடம்பெற்ற அநீதியை சில அதிகாரிகள்  மூடி மறைக்க செயற்படுவதாக நினைக்கின்றோம்.  எமது பிள்ளைகளை நாங்கள் இரவு பகலாக கண்விழித்து அதிக பணத்தை விரயம் செய்து  பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில்  கல்வி கற்பித்து வந்த நிலையில் இவ்வாறான ஆசிரியரின் செயற்பாட்டால் எமது பிள்ளைகளின் கல்வி எதிர்காலமே சூனியமாகியுள்ளது கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே எமது பிள்ளைகளான மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிவேண்டும்  நியாயம் கிடைக்க வேண்டு;ம் அதேவேளை இவ்வாறான ஆசிரியருக்கு தகுந்த தண்டனை வழங்க  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.