கோர நிகழ்வும் கொடூர நினைவுகளும்:

காசா மருத்துவமனையை தாக்கியழித்த இஸ்ரேல் !
யாழ் ஆஸ்பத்திரி படுகொலையின் 36வது நினைவு தினம் !
 ஐங்கரன் விக்கினேஸ்வரா
(பாலஸ்தீனத்தில் காசா மருத்துவமனை படுகொலையால் உலகே அதிர்ச்சி அடைந்துள்ள வேளையில், 36 வருடங்களுக்கு முன்பாக யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகளின் (Jaffna hospital massacre) நினைவு தினம் தமிழர் தாயகங்களில் நினைவு கூறப்படுகிறது)
உலக போர் விதிகளின் படி, எத்தகைய போர் என்றாலும் மருத்துவமனைகளில் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது. காயப்பட்டவரகள் மட்டுமின்றி அப்பாவி மக்களும் மருத்துவமனைகளில் தஞ்சம் புகுவார்கள். இதனால் ஒருபோதும் மருத்துவமனைகள் தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்பதை
ஐ.நா விதியுமாகும்.
நொடிகளில் தரைமட்டமான காசா மருத்துவமனை:
இதனை மீறி, இஸ்ரேல் காசாவில் உள்ள இருந்த பொது மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியது பெரும் போர்க் குற்றம் என்றே கருதப்படுகிறது. மேற்கத்தய ஊடகங்கள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றன என்றும், பின்னர் இஸ்லாமிய ஜிகாத்தின் ரொக்கட் தவறுதலாக வெடித்ததால் இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது என பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன.
எனினும் இந்த அழிவின் அளவு ரொக்கட் தாக்குதலால் ஏற்பட்டுள்ளது என கருதமுடியாத அளவிற்கு காணப்படுகின்றது. அல்ஜசீரா வெளியிட்டுள்ள வீடியோக்கள் மருத்துவமனையின் பல மாடிக்கட்டிடங்கள் தீப்பற்றி எரிவதை காண்பித்துள்ளன.உடல்கள் சிதறி, பெருமளவு இரத்தம் சிந்தியுள்ளதை இடிபாடுகள் இடையே காணமுடிகின்றது.
அங்கிலிகன் தேவாலயத்திற்கு சொந்தமான இந்த மருத்துவமனை முன்கூட்டிய எச்சரிக்கை இன்றியே தாக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துமனை காலை 7.30 மணிக்கு தாக்கப்பட்ட, அவ்வேளை இஸ்ரேலின் தாக்குதல்களில் காயமடைந்த பெருமளவானவர்கள் அங்கு காணப்பட்டனர்.
இஸ்ரேல் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் மருத்துவமனை பாதுகாப்பான இடம் என கருதி அங்கு தஞ்சமடைந்த பல பொதுமக்களும் காணப்பட்டனர். மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாரிய சத்தம் கேட்டது கூரை இடிந்து சத்திரசிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்த அறையின் மீது விழத்தொடங்கியது. இது படுகொலை என வைத்தியர் ஹசன் அபு சிட்டா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள் :
தற்போது காசா மருத்துவமனை படுகொலையால் உலகே அதிர்ச்சி அடைந்துள்ள வேளையில், 36 வருடங்களுக்கு முன்பாக யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகளின் (Jaffna hospital massacre) நினைவு தினம் தமிழர் தாயகங்களில் நினைவு கூறப்படுகிறது.
ஈழப்போரின் போது 1987 அக்டோபர் 21இல் இப்படுகொலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் நுழைந்த இந்திய அமைதிப் படை இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள், மற்றும் பணியாளர்கள் 90 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
மனித உரிமைக் அமைப்புக்கள் இந்த படுகொலைகளை இனப்படுகொலை எனக் கூறியுள்ளன. அதே நேரத்தில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளில் இடையில் அகப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என இந்திய இராணுவத்துக்குப் பொறுப்பான லெப். ஜெனரல் தெபிந்தர் சிங் தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசு இத்தாக்குதலை மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என 2008 ஆம் ஆண்டில் கூறியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு, மற்றும் ஜோன் ரிச்சார்ட்சன் போன்ற மேற்குலகக் கண்காணிப்பாளர்கள் மற்றும் பலர் இது ஒரு மனிதப் படுகொலைகள் எனக் கூறியுள்ளனர்.
இஸ்ரேல் பொய்யும் மறுப்பும் :
காசா மருத்துவமனையில் நோயாளிகள் சுகாதார பணியாளர்கள் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்கள் மீதான இந்த அதிர்ச்சி தரும் தாக்குதலை எவற்றாலும் நியாயப்படுத்த முடியாது எனகுறிப்பிட்டுள்ள மருத்துவமனை வைத்தியர் ஹசன் அபு சிட்டா
ஒரு இலக்கல்ல இந்த இரத்தக்களறி நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனையில் ஏற்கனவே ஏனைய காயங்களால் காயமடைந்த பெருமளவானவர்கள் காணப்பட்டனர். தற்போது காயமடைந்த மக்கள் தரையில் வலியில் கதறுகின்றனர்.
ஆயினும் காசாவில் அல்-அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ள நிலையில், அவர் பொய் சொல்கிறார் என்று ஐநாவுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “அவர் ஒரு பொய்யர். மருத்துவமனையை சுற்றி ஹமாஸ் அமைப்பின் செயல்பாடு இருப்பதாகக் கருதி இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அவர் தனது பதிவை நீக்கிவிட்டார். ஆனாலும், அதன் நகல் எங்களிடம் உள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம். பொய் கதைகளை அவர்கள் புனைவதை ஏற்க முடியாது” என தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தரப்பில் 1300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் தரைமட்டமாகி அப்பாவி மக்கள் பலியான கொடூரத்தை
இஸ்ரேல் மறுத்தாலும், உலக நாடுகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வந்துள்ள நிலையில், இந்த தாக்குதல் காசா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகளும், ஐநாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் – பாலஸ்தீன தொடரும் மோதலில் இந்த மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்துவிட்டதாக காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த வான் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என காசா குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் – காசா இடையே உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அரபு நாடுகளும், ஐநாவும் வலியுறுத்தியுள்ளன. ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் வெளியிட்ட அறிவிப்பில் காசாவில் உள்ள மருத்துவமனை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். சர்வதேச மனிதாபிமான சட்டப்படி மருத்துவமனைகளும், மருத்துவ பணியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நொடிகளில் தரைமட்டமான காசா மருத்துவமனையில் சத்திர சிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை கூரை இடிந்துவிழத்தொடங்கியது என காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
காசாவின் மருத்துவபிரிவு செயல் இழக்கிறது:
அடுத்த சில நாட்களில் காசாவின் மருத்துவபிரிவு செயல் இழக்கும் எனவும், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்பதால் இந்த தாக்குதல் மிக மோசமான கொடூரமாகும். அப்பாவி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோடி பாதுகாப்பான இடம் என தாங்கள் கருதிய இடத்தில் தஞ்சமடைந்திருந்தனர் – மருத்துவனையில் சர்வதேச சட்டங்களின் கீழ் அது பாதுகாப்பான இடம் எனவும் மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் சியாட் செகாடா
அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.
மிருகத்தனமான படுகொலை என்றும் சர்வதேச விதிகளை இஸ்ரேல் அப்பட்டமாக மீறியுள்ளதாக
பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். ஜோர்டானில் இருந்த நிலையில், இந்த கொடூர தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தவுடன் அவர் மேற்கு கரைக்குத் திரும்பினார். அமெரிக்க அதிபருடன் நடக்கவிருந்த சந்திப்பை ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு அரபு நாடுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மிருகத்தனமான தாக்குதல்:
துருக்கி அதிபர் எர்டோகனும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார். காசாவில் இஸ்ரேலில் நடத்தும் மிருகத்துத்தை நாம் அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் தாக்குதலை ‘போர் குற்றம், இனப்படுகொலை’ என்று குறிப்பிட்டு ஓமன் அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதல்களை மேற்குலக நாடுகள் உடனடியாக தடுக்க வேண்டும் என அரபு லீக் தலைவர் அஹ்மத் அபுல் கெயிட் வலியுறுத்தியுள்ளார். அதேபோல ஜோர்டான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளும் இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காசாவில் இருந்து வரும் தகவல்கள் பேரழிவு தருவதாகக் கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அரபு நாடுகள் மட்டுமின்றி உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு, “பாலஸ்தீனப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுகாதார ஊழியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காசாவில் முழு வீச்சில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகள் கண்டனம்:
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனச் சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல யுனிசெப் அமைப்பும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், காசா பகுதியில் உள்ள குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட
துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு 3 நாட்கள் துக்க தினமாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதலில், தரை வழியாகவும் வான் வழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. இந்த தாக்குதலில் இது வரையில் 5000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா பகுதியிலிருந்து மக்கள் வெளியேற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்ரேல் விமான படை பலஸ்தீன் மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் இந்த அதிபயங்கர தாக்குதலுக்கு பாலஸ்தீனம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போது இஸ்ரேலின் இக்கொடூர தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் கண்டனப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
2007 இல் ஹமாஸ் அமைப்பினர் காசா ஆட்சியை கைப்பற்றிய பின்னர் ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதல்களில் ஒரே நாளில் மிக அதிகளவானவர்கள் கொல்லப்பட்ட கோரமான சம்பவமாக இது விளங்குகின்றது.
யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்:
யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை வட மாகாணத்தில் மக்கள் அடர்ந்து வாழும் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு அடிப்படை மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் ஒரேயொரு மருத்துவமனை ஆகும்.
போர்க்காலங்களில் இப்பகுதி போரில் ஈடுபடுபவர்கள் அணுகாத வண்ணம் பாதுகாக்கப்பட்ட ஒரு மருத்துவமனையாக இயங்கி வந்தது. 1987 அக்டோபர் 21 தீபாவளி விடுமுறை நாளாகும். அன்றும் முதல் நாட்களிலும் குடாநாட்டின் பல்வேறு பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற இந்திய இராணுவத்தினரின் ஏவுகணை வீச்சுகளில் இறந்த 70 இற்கும் அதிகமான பொதுமக்களின் இறந்த உடல்கள் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.
விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, யாழ் நகரை இந்திய இராணுவம் கைப்பற்றும் என்ற அச்சம் நிலவியது. இதனால் மருத்துவமனையின் ஊழியர்கள் சிலர் அச்சத்தில் பணிக்குச் செல்லத் தயக்கமடைந்த நிலையிலும் பலர் தமது கடமைகளுக்குச் சென்றிருந்தனர்.
அக்டோபர் 21, 1987 காலையில் யாழ் கோட்டைப் பகுதியில் இருந்து மருத்துவமனைப் பகுதியை நோக்கி பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களும், உலங்கு வானூர்திகளில் இருந்து குண்டுத் தாக்க்குதல்களும் நடாத்தப்பட்டன.
அன்று மாலை இந்திய இராணுவத்தினர் மருத்துவமனையின் முன்பக்கமாக உள்ளே வந்தனர். நடைபாதை வழியாக உள்ளே வந்த அவர்கள் அங்கிருந்த அனைவரையும் உள்ளே செல்லுமாறு பணித்தனர். அதன் பின்னர் மேற்பார்வையாளரின் அலுவலகத்தினுள்ளும் ஏனைய அறைகளுள்ளும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என நேரில் கண்டவர்களின் கூற்றுப் படி, பல பணியாளர்கள் இறந்து வீழ்ந்தனர்.
இவர்களில் மேற்பார்வையாளர், மற்றும் முதலுதவி வண்டி சாரதியும் அடங்குவர். ஒரு படையினன் பணியாளர் ஒருவரை நோக்கி கிரனேட்டு எறிந்ததில் பலர் கொல்லப்பட்டனர். இன்னும் ஒருவரின் கூற்றுப் படி, இந்திய இராணுவத்தினர் ஊடுகதிரியல் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றனர்.
அதேவேளை எட்டாம் இலக்க வார்டில் இருந்து நோயாளிகள் பலர் இங்கு பாதுகாப்புக்காக தங்கியிருந்தனர். இறந்து விட்டதாகத் தரையில் படுத்திருந்த சிலர் உயிர் தப்பினர்.
இரவு முழுவதும் துபாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சுகளும் இடம்பெற்றன என நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த நாள் அக்டோபர் 22, 1987
காலையில் மருத்துவர் சிவபாதசுந்தரம் மேலும் மூன்று தாதிகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். அவர்கள் தமது கைகளை மேலே தூக்கியவாறு “நாம் சாதாரண மருத்துவர்களும் தாதிகளும். நாம் சரணடைகிறோம்,” எனக் கத்தியபடி சென்றனர். அவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. மருத்துவர் சிவபாதசுந்தரம் அங்கே கொல்லப்பட்டார், தாதிகள் மூவரும் கடும் காயங்களுக்குள்ளானார்கள்.
இதன்பின் 1100 மணியளவில் இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் வார்டு ஒன்றினுள் நுழைந்தார். ஒரு பெண் மருத்தவர் எதிரில் எதிர்ப்பட்டார். அவர் இராணுவ அதிகாரிக்கு நிலைமையை விளக்கிய பின்னர் அவர் ஏனைய பணியாளர்களை கைகளைத் தூக்கியவாறு வெளியேறி வருமாறு கூறினார். அங்கு உயிருடன் இருந்த 10 பேர் வெளியேறினர். வெளியேறும் போது அவர்கள் மருத்துவர் கணேசரத்தினம் இறந்து கிடப்பதைக் கண்டனர். அன்று மாலை இறந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் சேகரிக்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டன என இக்கோர நிகழ்வை நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
பாரிய மனிதப் படுகொலை
ஆனாலும் யாழ் மருத்துவமனை வளாகத்தினுள் இருந்து தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இடையில் அகட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்றும் இந்திய இராணுவம் தெரிவித்தது. லெப். ஜெனரல் தெப்பிந்தர் சிங் இதனை மீண்டும் வலியுறுத்தினார்.ஆனால், இத்தாக்குதல் தூண்டுதல் அற்ற பொதுமக்கள் படுகொலைகள் என மனித உரிமை அமைப்புக்களும், இலங்கை அரசும் தெரிவித்தது.