(கனகராசா சரவணன்))
மட்டு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நெல்லூரில் குடியிருப்பு பகுதியில் உள்நுழைந்த யானைகள் வீடுகள் மீது தாக்குதலில் இரு வீடுகள் இடிந்து வீழ்ந்ததில் நித்திரையில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பிய சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஊடுருவி விவசாயம் மற்றும் தென்னை, மா, வாழைமரம் போன்ற மரங்களை முறித்து சேதப்படுத்திவருவதுடன் குடிமனைகளைம் மீது தாக்குதல் மேற்கொண்டுவருகின்ற நிலையிலல் அந்த பகுதியில் வசித்துவரும் சிறியோர் தொடக்கம் முதியவர்வரையில் இரவில் நித்திரையின்றி அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்திநிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை குடிமனைப்பகுதிக்குள் ஊடுருவிய யானைகள் இருவீட்டை தாக்கி உடைத்ததையடுத்து அங்கு நித்திரையில் இருந்த 2 மாதக் குழந்தையுடனான தாயாரும் அடுத்த வீட்டில் நித்திரையில் இருந்த 4 சிறுவர்கள் உட்பட்ட குடும்பத்தினர் தெய்வாதீனமாக உயிர் தப்பிய நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்
இந்த தாக்குதலில் இரு வீடுகளும் முற்றாக சேதமடைந்ததையடுத்து பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களும் வீடு இன்றி வீதியில் நிர்க்கதியாக இருந்துவருகின்றனர்.