உரிமைகளுக்காகத் தமிழர்கள் எதிர்காலத்தில் “அன்பு “என்கிற வழியை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்

முனைவர் கல்லாறு சதீஷ்

தங்களின் உரிமைகளுக்காகத் தமிழர்கள் எதிர்காலத்தில் “அன்பு “என்கிற வழியை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்,அதற்காகக் கல்வியிலும்,பொருளாதாரத்திலும் தங்களை மேலும் வளர்த்துக்கொண்டு பேச்சு வார்த்தைகளின் மூலம் மட்டுமே தமிழர்கள் தாங்கள் இழந்த உரிமைகளை மீட்டுக்கொள்ள வேண்டும்  என கல்லாறு சதீஷ் தெரிவித்தார்.

கனடா உதயன் பத்திரிகையின்பல்சுவைக் கலைவிழா ஸ்காவுறோவில் மிகச் சிறப்பாக மாலை ஸ்காவுறோ தமிழிசைக் கலாமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில்கனடா ஒன்ராறியோ மாநில முதியோர் நலன் பேணல் விவகார அமைச்சர் றேமண்ட் சோ ,கனடா பாராளுமன்ற உறுப்பினர் சல்மா ஷாகித் ,ரொறொன்ரோ நகர பிரதி மேயர் ஜெனிபர்,ரொறோன்ரோ நகர கவுன்ஸ்லர் ஜமால் மேயர்,ஊடகவியலாளர்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,பத்திரிகையாளர்கள்,தமிழகப் பாடகர் வி.எம்.மகாலிங்கம் மற்றும் சுமார் நாநூறுக்கும் மேற்பட்ட நேசத் தமிழ் நெஞ்சங்கள் கலந்து கொண்டனர்

நிகழ்வில் பிரதம அதியாக கலந்துகொண்ட சுவிஸ் தொழிலதிபரும் ,சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவரும்,எழுத்தாளரும்,கவிஞரும்,பேச்சாளருமான கலாநிதி கல்லாறு சதீஷ் என்கிற முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா  தொடர்ந்து உரையாற்றுகையில்

திருக்குறளைப் படித்த மகாத்மா காந்தி “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” எனும் குறலின் படிதான் பிரித்தானியாவுக்கு எதிராக அகிம்சை வழி நடந்து மாபெரும் இந்திய தேசத்தை மீட்டெடுத்தார்.
அந்த மகாத்மாவின் வழி ஒன்றே இன்றைய உலகப்போக்கில் தமிழர்கள் உரிமைகளைப் பெற ஒரே வழி என்று நான் கருதுகிறேன்.மனித மனங்களை வெற்றிகொள்வதன் மூலம் மட்டுமே நிரந்தரத் தீர்வை அடைய முடியும்”

கிறிஸ்துவுக்கு முன்னர் 161 ஆம் ஆண்டு சோழமன்னர் எல்லாளனுடைய ஆட்சி மெளனித்தது,கிறிஸ்துவுக்குப் பின்னர் 1077 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழ மன்னனின் ஆட்சி மெளனித்தது,2009 ஆண்டு மீண்டுமொரு முறை தமிழர்களின் ஆயுதங்கள் மெளனித்தன,இப்படி ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறைதான் மண் மீட்பும்,வெற்றியும்,தோல்வியும் மாறி மாறி நிகழ்ந்தன!
உயிர்கள் விதைக்கப்பட்டன,இரத்தங்கள் வார்க்கப்பட்டன,சதைகள் வீசப்பட்டன,அத்தனையும் விரயமாயின என்றார்.

இந்த நிகழ்வுக்கு  சுமார் முப்பதற்கும் மேற்பட்ட வர்த்தகப் பிரமுகர்கள் நிதி அனுசரணை வழங்கியதுடன் அல்லாமல் விழாவில் கலந்து கொண்டும் சிறப்பித்தனர்.