தலைமன்னார் ஊர்மனையில் 94 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது

( வாஸ் கூஞ்ஞ) 16.10.2023

தலைமன்னார் ஊர்மனை கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட திடீர் பரிசோதனையில் ஒரு படகில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது திங்கள் கிழமை (16) அதிகாலை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் தரித்து நிற்கப்பட்ட படகு ஒன்றில் சந்தேகம் கொண்டு அவற்றை பரிசோதனை செய்துள்ளனர்.

அப்பொழுது அந்த படகுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 94 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 4 கிலோ 194 கிராம் கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் என்ற நான்கு போதைப் பொருள் பொதிகளும் ,  ஒரு கிலோ 34 கிராம் எடை கொண்ட ஹெரோயின் பொதி ஒன்றும் , 5 கிலோ 254 கிராம் ஹாஷிஸ் என்ற போதைப் பொருள் 5 பொதிகளுமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

படகிலிருந்து மீட்கப்பட்ட இப்போதைப் பொருட்கள் சுமார் 94 மில்லியன் ரூபா பெறுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்க்கப்பட்ட இந்த போதைப் பொருட்களையும் படகையும் கடற்படையினர் சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை என பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இருந்தும் இது தொடர்பான புலன் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.