மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள மன்னார் மாவட்டத்திற்கான தொழிற் பயிற்சி நிலையத்திற்கு இளையோர்களின் தொழிற் பயிற்சிக்கு என பல லட்சம் பெறுமதியான அழகு சாதனம் மற்றும் சிகையலங்காரப் பொருட்கள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இவற்றை இங்குள்ள இளையோர்களின் தொழில் முயற்சிக்குப் பயன்படுத்தாமல் அம்பாந்தோட்டைக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று பொருட்களை ஏற்றிச் செல்வதற்காகன வாகனமும் வியாழக்கிழமை (12) சம்பவ இடத்துக்கு வந்திருந்தது.
இது தொடர்பாக இளைஞர் யுவதிகள் மூலமாக சம்பவத்தை கேள்விப்பட்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் நேரடியாக தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பார்வையிட்ட பின் வடக்கு மாகான ஆளுநரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக பேசியதன் அடிப்படையில் குறித்த பொருட்களை அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்லப்பட இருந்த முயற்சி கைவிடப்பட்டது
மேலும் இந்த விடயம் தொடர்பாக வியாழக் கிழமை (12) மாலை நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் நாலா பக்கங்களிலும் இருந்து இளையோர் இத் தொழிற்பயிற்சியில் பயிற்சிபெற ஆர்வம் கொண்டுள்ளதால் இவர்களின் போக்குவரத்து வசதிகளை கவனத்துக்கு எடுக்கப்பட்டு ஒரு தகுந்த இடத்தில் இயங்குவதற்கான இடமும் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இப்பயிற்சியினை மீண்டும் ஆரமப்பிப்பதற்கான தீர்மானம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதும் கறிப்பிடத்தக்கது.