கல்விச் சமூகத்திலுள்ள ஆசிரியர் குழாம் எம்மால் என்றும் தலை வணங்கப்பட வேண்டியவர்கள். சர்வதேச ஆசிரியர்தினம் ஒக்டோபர் 5ம்திகதி, இலங்கை ஆசிரியர் தினம் ஒக்டோபர் 6ம்திகதி தொடர்பாக இத் தினத்தை கொண்டாடுகின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஓன்றுமறியா சிறு குழந்தைகள் பொருளாதாரம், கல்விச்சூழல், போக்குவரத்து, நல்லொழுக்கம், உறவினர்களின் பராமரிப்பு போன்ற விடயங்களில் ஏற்றத்தாழ்வுடன் வசித்து வந்த சிறார்களை பெற்றோர்களால் முன்பள்ளிக்கு கொண்டு சென்று ஆசிரியர்களிடம் ஓப்படைத்த நாள் தொடக்கம் ஊக்கத்திறன் இருந்து ஆரம்பித்து சமூகத்தில் நல்ல பிரஜையாகவும், நல்ல கல்வி மான்களாகவும், உலகம் போற்றுமளவிற்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுப்பவர்கள் இவ் ஆசிரியர்களே.
சமூகத்தில் விலை மதிக்க முடியாதவை கல்விச் செல்வமாகும். இப்படிப்பட்ட செல்வத்தை சமூகத்திற்குள் கொண்டு செல்வதனாலேயே ஆசிரியர்கள் குருவாகவும், தெய்வமாகவும் போற்றப்படுகின்றார்கள். இதற்குச் சான்றாக மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் முது மொழியில் எந்த சேவைக்கும் இல்லாத ஒரு வரப்பிரசாதம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.
இவ் ஆசிரியர்களின் வழி காட்டுதழினால் நல்ல பண்பான, ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும், நல்ல பிரஜைகளை உருவாக்குவதற்கும் ஆசிரியர் சமூகமே காரணமாக அமைகின்றது.
இதனால் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் சமூகத்தின் நல்லொழுக்கம் பேணப்படுகின்றது என்றால் அது ஆசிரியர்கள் இட்ட விதை என்பது யதார்த்தமாகும்.
நாட்டிலுள்ள அதிகஸ்டப் பிரதேச பாடசாலைகள், கஸ்டப்பிரதேச பாடசாலைகள், பாலர் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள். அத்தோடு பொருளாதார கஸ்டம், எரிபொருள் விலையேற்றம், போக்குவரத்துக் கட்டணம்,உட்பட இலவசக்கல்வி, பணத்திற்காக சிலர் கல்வியை விற்கும் சூழல் என்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் அர்ப்பணிப்புடனும், தியாகமனப் பாங்குடனும் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி கௌரவிக்க வேண்டியது சமூகத்தின் கடமையும், பொறுப்புமாகும்.
இச் சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக சுபோதினி அறிக்கையின் படி ஆசிரியர்களின் ஒருபகுதி சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. மீதி சம்பளக் கொடுப்பனவையும் அரசு வழங்கும் பட்சத்தில் ஆசிரியர்கள் மகிழ்சியோடும், மனநிறைவோடும் சேவையாற்றவார்கள்.
இதைத் தொடர்ந்து சில ஆசிரியர்களுக்கு இருப்பதற்கு காணி,வீடு, ஏனைய வாழ்வாதாரத்திற்கான விடயங்களைக் கூட நிறைவேற்ற முடியாமல் கடன் பெற்று ஓய்வூதியம் பெறும் வரையும் கையேந்தும் அளவிற்குக் கூட சில ஆசிரியர்கள் துன்பதுயரங்களைத் தாங்கி நிற்பது வேதனைக்குரிய விடயமாகும்.
வங்கியில் கடன்களைப் பெற்று கட்டமுடியாமல் முடமாக்கப்பட்ட ஆசிரியர்களும் உண்டு. இவ்வளவு துயரங்களுக்கும் அப்பால் மனநிறைவோடு குடும்பங்களாகச் சென்று சந்தோசமாக மாணவச் செல்வங்களை வழி நடாத்தி தன்னைத் தானே உருக்கி ஒளி கொடுக்கும் மெழுகுதிரியைப் போன்று ஆசிரியர்களும் தங்களை உருக்கி மாணவச் செல்வங்களுக்கு ஒளி கொடுப்பது பாராட்டுக்குரிய விடயமாகுமென இந்நாளில் மு.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.