ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிதான் இன்றும் நம் நாட்டில் நடந்து வருகின்றது.இதனால் தான் IMF இரண்டாவது கடன் தவணை கிடைக்கவில்லை. 

சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டாவது கடன் தவணை தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்கள் சரியான முடிவு எடுக்கப்படாமல் முடிவடைந்துள்ளன என்றும், இத்திட்டத்தை உரிய திறனுடன் நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டதால் இரண்டாவது தவணைக்கான குறிப்பிட்ட திகதி அறிவிக்கப்படவில்லை என்றும்,இதற்கு, இலங்கை அரசாங்கம் வருமான இலக்குகளை அடைய வேண்டும் என்றும்,ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுப்பது தொடர்பான அரச நிர்வாகத்துடன் தொடர்புடைய இலக்குகளை அடைய வேண்டும் என்றும்,இதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று தாம் வினவுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிர்வாக பிழைகள் சார்ந்த அறிக்கையின் பிரகாரம், இந்நாட்டில் ஒரு சில மேல்தட்டு குடும்பங்கள் மத்தியில் ஊழல் தலைவிரித்தாடுவதும், அதிகாரம் குவிவதும்,பொதுச் சொத்தை தவறாகப் பயன்படுத்துவதும்,ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சி போன்றவற்றால் நாடு வங்குரோத்தடைந்து விட்டதாகவும்,இந்நாட்டில் இன்னமும் ஊழல் மிகு குடும்ப ஆட்சியின் நீட்சியே நடந்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் இரண்டாம் கடன் தவணையை செலுத்தாதது தொடர்பாக நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று(03) பாராளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் பிரகாரம், பொதுநலன் சார் பணிகள் சரிந்து,ஊழல் எதிர்ப்புத் திட்டம் இல்லாது, சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் ஜனநாயகம் கூட பலவீனமடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை நிபந்தனைகளில்,பூர்த்தி செய்யப்பட்ட நிபந்தனைகள் மற்றும் பூர்த்தி செய்யத் தவறிய நிபந்தனைகள் யாது என வினவுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்நாட்டிலுள்ள தொழில் வல்லுநர்களிடம் இருந்து அரசாங்கம் அதிக வரி அறவிட்டு வருவதாகவும்,எரிபொருள்,நீர், மின்சார கட்டணங்களை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது என்றும்,இவை அனைத்தும் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலே செய்யப்பட்டாலும்,2 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு 1.7 பில்லியன் வரி அறவீட்டை மேற்கொள்ளாது விட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.