திருகோணமலையில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு

ஹஸ்பர்_
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் பிரிவின் ஏற்பாட்டில் காப்போம் தொண்டு அமைப்பின் அனுசரணையுடன் சர்வதேச முதியோர் தின நிகழ்வானது உப்புவெளி பிரிவில் அமைந்துள்ள சென் ஜோசப் முதியோர் இல்லத்தில் நேற்று (01/10/2023) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி  தலைமையில் நடைபெற்றது.
“ஆரோக்கிய மிகு அகவையினை நோக்கி உலகளாவிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான மனித உரிமைகளை தலைமுறைகள் கடந்து நிறைவேற்றுதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் இம் முறை  சர்வதேச முதியோர் தின நிகழ்வு கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சென். ஜோசப் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்களும், உப்புவெளி, அபயபுர, கிண்ணியா போன்ற பிரதேசங்களிலிருந்து கலந்து கொண்ட முதியோர்களும் அவர்களது கலை கலாசார நிகழ்ச்சிகளை மிகவும் திறம்பட வழங்கினர். மேலும் முதியோர்களுக்கு உலர் உணர்வு பொருட்களும் பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.இர்பான், சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண  தொழில் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜீவிதன் சுகந்தினி, சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரணவன், சமூக சேவைகள் பிரிவு உத்தியோகத்தர்கள், காப்போம் தொண்டு அமைப்பின் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.