வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்களின் போராட்டம்.

க.ருத்திரன்
வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்களால் இன்று வியாழக்கிழமை (28) கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
வி.எம்.எஸ் ( v.m.s) எனப்படும் கட்புல ஊடறு தொழில் நுட்ப கருவியின் கட்டணம்,துறைமுகத்தில் தங்குமிடம் பற்றாக்குறை மற்றும் ஜஸ் கட்டியின் விலை அதிகரிப்பு தொடர்பாக அதற்கான தீர்வு கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் மீனவ படகு உரிமையாளர்களினால் வாழைச்சேனை துறைமுகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.
மீனவனை வாழவிடு,ஜஸ்(ice) கட்டியின் விலையை மாற்றம் செய்,படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டாதே,துறைமுக குறைபாடுகளை நிவர்த்தி செய்,என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு ஜனாதிபதி மற்றும் கடல்தொழில் அமைச்சரின் கவனத்திற்காக கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டமானது வாழைச்சேனை மீன் பிடி துறைமுக முகாமைத்துவதற்கும் கடல் தொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு எதிராக இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த வி.எம்.எஸ்.தொழில்நுட்ப கருவியானது சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் படகுகளை கண்கானிக்கும் முகமாக அவுஸ்ரேலியா அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட கருவியாகும்.
இதற்காக எங்களிடமிருந்து மாதாந்தம் ரூபா 6000 அறவிடப்படுவதாகவும் அப்பணத்தை செலுத்தாத பட்சத்தில் கடல் தொழிலுக்கு படகு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.அத்துடன் துறைமுகத்தில்  34 அடி படகுகளை நிறுத்துவதற்கும் 1500 ரூபா பெறப்பட்ட போதும் தற்போது அந்த கட்டணம் 2800 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இத்தொகை ஒரு வருடத்திற்கு 150000 ரூபா மேலதிகமாக செலவழிக்க வேண்டியுள்ளது. தற்போது 450 படகுகள் உள்ளது.துறைமுகத்தில் 150 படகுகளுக்கு மேல் நிறுத்த இடமில்லாத நிலமை காணப்படுகிறது.
ஏனைய படகுகளை வேறு துறைமுக இடங்களில் வாடகை செலுத்தி  நிறுத்துகிறோம்.இதனால் இரட்டிப்பு வாடகை செலுத்தவேண்டியுள்ளது.எனவே துறைமுகத்தில் படகு நிறுத்தும் இடத்தினை விரிவுபடுத்தி தருமாறு கோரிக்கை விடுத்தனர்.துறைமுக நிர்வாகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ,புதிய செலவுகளால் மீன் பிடித் தொழிலை முன்னெடுப்பது மிகவும் சிரமமாகவுள்ளது.ஆகையால் படகு உரிமையாளர்களாகிய எங்களுக்கு தகுந்த தீர்வினை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட படகு உரிமையாளர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் துறைமுக முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டது.அதனை பெற்றுக்கொண்ட முகாமையாளர் இது தொடர்பாக உயர் அதிகாரியின் கவனத்திற்கும் தெரியப்படுத்துவதாக கூறினார்.