கல்முனையில் பாடசாலை மாணவர்களுக்கு போசணை நிறைந்த பிஸ்கட்டுகள் வழங்கள்

(எம்.எம்.றம்ஸீன்)

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் போசனை முகாமைத்துவம் என்பனவற்றை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களின் போசாக்கினை மேம்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போசாக்கு உணவு வழங்கும் விசேட வேலைத்திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளுக்கு போசாக்கு நிறைந்த பிஸ்கட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன

கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் வழிகாட்டலுக்கமைவாகவும் அக்கரைப்பற்று ஆயுர்வேத மருந்து உற்பத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட போசாக்கு பிஸ்கட்டுகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனைப் பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனை அல்-முனீரா பெண்கள் உயர் பாடசாலை, நிந்தவூர் ஜெர்மன் நட்புறவு கனிஷ்ட பாடசாலை, அட்டப்பள்ளம் ஸஹிதா வித்தியாலயம் என மூன்று பாடசாலைகளின் மாணவர்களுக்கே மேற்படி போசாக்கு பிஸ்கட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ.அப்துல் வாஜித், தொற்றா நோய்ப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாத், கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.நபீல், அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.அப்துல் ஹை, ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.