சம்மாந்துறையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்.
(வி.ரி.சகாதேவராஜா)
புனித அல் குர்ஆன் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மதத்தவர்களுக்கும் ஒரு பொதுவான நல்ல வழிகாட்டி.
இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று(27) புதன்கிழமை சம்மாந்துறையில் இடம் பெற்ற வைபவமொன்றில் தெரிவித்தார்.
சம்மாந்துறை அஹதியா( முஸ்லிம் தளம்) பாடசாலைகளின் கூட்டிணையத்தின் ஏற்பாட்டில் அஹதியா சான்றிதழ் வழங்குதல் கௌரவிப்பு விழா (27) புதன்கிழமை சம்மாந்துறை நகர மண்டபத்தில் அமைப்பின் தலைவர் ஆசிரிய ஆலோசகர் இசட்.எம்.றிஸ்வி தலைமையில் நடைபெற்றது .
அங்கு கிழக்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் றணீஸ் கிழக்கு மாகாண நிருவாகத்தின் உயரதிகாரிகளான ஏ.மன்சூர் ஏ.நசீர் றிபாஉம்மா பிரதேச செயலாளர் ஹனிபா முன்னாள் செயலாளர் அஷ்சேய்க் அமீர் சர்வசமய சம்மேளனம் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
அங்கு ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்..
உலகில் உள்ள சிறந்த மதங்களில் இஸ்லாமிய மதமும் ஒன்றாகும். மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் எவ்வாறு நல்ல விடயங்களை முன்னெடுக்க வேண்டும் போன்ற தத்துவங்கள் நிறையவே அதில் இருக்கின்றன.
உண்மையில் இஸ்லாம் ஒரு நல்லதொரு வழிகாட்டி .அந்த வகையில் அறநெறி பாடசாலை மாணவர்களில் இன்று சான்றிதழ் பெறுகின்றவர்கள் உண்மையிலேயே சிறந்த மனிதர் என்று சொல்லலாம்.அறநெறி பாடசாலைகளில் மனிதத்துவம் கட்டி எழுப்பப்படுகின்றது. அவர்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான அடிப்படை அறிவை ஆளுமையை அங்கு பெறுகின்றார்கள்.
இதேபோன்று இஸ்லாமிய அமைப்புகள் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை செய்ய வேண்டும். இவைகளுக்கு உதவுவதற்கு கிழக்கு மாகாண சபை என்றும் தயாராக இருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் இணைப்பாளர் றணீஷ் போன்றோர் முஸ்லிம் பிரதேச அபிவிருத்தியில் கூடுதலான கவனத்தைச் செலுத்தி வருகின்றார்கள். அவர்களுக்கான ஒத்துழைப்பை வழங்க காத்திருக்கிறேன். பொத்துவில் வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த இன்று காலை முஷாரப் எம்.பி. என்னை சந்தித்து பேசினார்கள். அனைத்தும் நன்றாகவே நடக்கும். என்றார்.
ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
அதைப்போல சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து ஹனிபாவுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.