மட்டு மேற்கு போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்தும் நிகழ்வு

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்தும் நிகழ்வு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் நேற்று (செவ்வாய்கிழமை ) குறிஞ்சாமுனை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் யோகேந்திரா ஜெயச்சந்திரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் சாதனை படைத்த மாணவர்களையும் அதற்கு உறுதுணையாக இருந்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கு மலர்மாலை அணிவித்து பேண்டு வாத்தியத்துடன். வலயக்கல்வி அலுவலகத்திலிருந்து குறிஞ்சாமுனை பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனையடுத்து மட்டக்களப்பு மேற்கு வலயத்திலிருந்து மாகாண மட்ட போட்டியில் சாதனை படைத்த 102 மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசுகளும், வெற்றிக் கிண்ணங்களும் கல்வித்திணைக்கள அதிகாரிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.