நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் நடப்பு ஆண்டுக்கான புதிய தலைவராக பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம், பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற நிகழ்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது.
புதிய தலைவருக்கான போட்டியில் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கணிசமான வாக்குகளைப் பெற்று பேராசிரியர் முஸ்தபா அச்சங்கத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக முதற்தொகுதி மாணவர்களுள் ஒருவராகிய பேராசிரியர் முஸ்தபா கடந்த காலங்களிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர். இதன்போது ஆசிரியர்களின் நலன்களை வெற்றிகொள்வதில் பேராசிரியர் முஸ்தபா குறிப்பிடும்படியான பங்களிப்புக்களை நல்கியிருந்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ துறையின் தலைவராகிய பேராசிரியர் முஸ்தபா மீண்டும் அத்தகைய பொறுப்புமிக்க பதவிக்கு அமர்த்தப்பட்டிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப்பெற்றுள்ளது.