மட்டக்களப்பில் சர்வதேச கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் நிகழ்வு.  

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)    மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் சர்வதேச கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள்  இன்று (21) நடைபெற்றது.

இந்நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி  தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசக் கடற்கரையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பிரிவுகளின்  கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூகமட்ட குழுக்கள் மற்றும் பிரதேச மக்கள் என 300 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றினர்.

இதன்போது கடற்கரையில் பரவிக் காணப்பட்ட பெருந்தொகை பிளாஸ்டிக் கழிவுகள்  ஒன்று சேர்க்கப்பட்டு, அகற்றப்பட்டதுடன்  கரையோரம் சுத்தப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.