கிழக்கு மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதிக்கும் மட்டு.மேற்கு வலயம்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் சாதனையை நிலைநாட்டி வருகின்றனர்.

மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், 20.09.2023ஆம் திகதி வரை நடைபெற்று முடிந்த போட்டி முடிவுகளின் அடிப்படையில், நான்கு முதலாம் இடங்களையும் ஐந்து இரண்டாம் இடங்களையும் நான்கு மூன்றாம் இடங்களையும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் பெற்றுக்கொண்டுள்ளது.

குறித்த வலயத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி பாடசாலையைச் சேர்ந்த 16வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் ரி.ஜோதிகா என்ற மாணவி தட்டெறிதலில் முதலிடத்தினையும் ஈட்டி எறிதலில் 3ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய 20வயதின் கீழ் பெண்கள் பிரிவில் ரி.கலைமகள் என்ற மாணவி 5000மீற்றர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் 16வயதின் கீழ் பெண்கள் பிரிவில் ரி.வினுஸ்கா குண்டு போடுதல் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

முதலைக்குடா மகா வித்தியாலய 20வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் 5000மீற்றர் ஓட்டப்போட்டியில் இ.இந்துஜன் முதலிடத்தினையும் பெற்றுள்ளார்.
அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய 20வயதின் கீழ் பெண்கள் பிரிவில் ரி.கஜேந்தினி என்ற மாணவி 200மீற்றர் ஓட்டத்தில் முதலிடத்தினையும் நீளம் பாய்தலில் 3ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

பன்சேனை பாரி வித்தியாலய 16வயதின் கீழ் பெண்கள் பிரிவில் கே.குவேசா என்ற மாணவி 200மீற்றர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பங்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைச் சேர்ந்த 18வயதின் கீழ் பெண்கள் பிரிவில் ரி.தேவதர்சினி என்ற மாணவி குண்டு போடுதல் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தினையும் அயித்தியமலை தமிழ் கலவன் பாடசாலை 12வயதின் கீழ் பெண்கள் பிரிவில் பி.டக்சனா என்ற மாணவி 60மீற்றர், 100மீற்றர் போட்டிகளில் மூன்றாம் இடங்களையும் நாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலய 12வயதின் கீழ் பெண்கள் பிரிவில் நீளம் பாய்தலில் ஜே.வேணுஜா முதலிடத்தினையும் இருட்டுச்சோலைமடு விஸ்ணு வித்தியாலய 14வயதின் கீழ் பெண்கள் பிரிவில் ரி.நிறோசிகா 60மீற்றர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

குறித்த மாணவர்கள் மாகாணப்போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னர் வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் தலைமையில் விசேட பயிற்சி முகாம் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.