(வீரகத்தி தனபாலசிங்கம்)
அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக பிராந்திய செய்தியாளர்களாக பணியாற்றிவருபவர்கள் என்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரு இன்று சிலரே இருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் அதுவும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அத்தகைய நீண்டகால அனுபவமுடைய பத்திரிகையாளராக ஏ.எல்.எம். சலீம் அவர்களை குறிப்பிட முடியும்.
தொடர்ந்தும் துடிப்புடன் பணியாற்றிவரும் அவர் இன்று 75 வது அகவையில் பிரவேசிக்கிறார். அவரை ஆரோக்கியத்துடன் நீடூழி வாழவும் ஊடகத்துறைக்கு மேலும் பயனுறுதியுடைய பங்களிப்பைச் செய்யவும் வாழ்த்துவோம்.
நிந்தவூரைச் சேர்ந்த சலீம் 1966 ஆம் ஆண்டு வீரகேசரியின் செய்தியாளராக பத்திரிகைத்துறையில் பிரவேசம் செய்தார். பிறகு சுதந்திரன், தினகரன், தினபதி, சிந்தாமணி, தினக்குரல் என்று பல பத்திரிகைகளின் பிராந்திய செய்தியாளராக பணியாற்றி தனது சேவையை விரிவுபடுத்தினார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் தினசரியின் அம்பாறை மாவட்டச் செய்தியாளராக அதன் தொடக்ககாலம் முதலிருந்தே சலீம் பணியாற்றிவருகிறார். இதனிடையே, அவரின் பணியின் தரம் கண்டு சில இலத்திரனியல் ஊடகங்களும் கூட அவரது சேவையை நாடின.
இலங்கையின் தமிழ்ப்பத்திரிகைத் துறையில் வளமான ஒரு மரபை விட்டுச்சென்ற புகழ்பூத்த பத்திரிகை ஆசிரியர்களான அமரர்கள் எஸ்.டி. சிவநாயகம், ஆர்.சிவகுருநாதன், கே.சிவப்பிரகாசம், ஆ.சிவனேசச்செல்வன், எஸ். நடராசா, கே.கே. இரத்தினசிங்கம், கானமயில்நாதன் ஆகியோரின் காலத்தில் அவர்களின் வழிநடத்தலில் பணியாற்றிய சலீம் இன்றைய இளம் பத்திரிகை ஆசிரியர்களின் காலத்திலும் பிராந்திய செய்தியாளராக தொடருகிறார்.
தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி காரணமாக பத்திரிகையாளர்களின் செயற்பாட்டு முறைகளில் நவீன கருவிகளைப் பயன்படுத்தி கடைப்பிடிக்கவேண்டியிருக்கும் மாற்றங்களுக்கு தன்னை இசைவாக்கிக் கொண்டு தங்கள் பணியை தொடர்ந்தும் செய்துவரும் தமிழ்பேசும் பத்திரிகையாளர்களில் சலீமும் ஒருவர் எனலாம்.
வெறுமனே பிராந்திய செய்திகளை மாத்திரம் அனுப்பும் ஒரு செய்தியாளராக மாத்திரமல்ல, அரசியல், சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்த பெருவாரியான கட்டுரைகளையும் சலீம் எழுதிவந்திருக்கிறார். பத்திரிகையாளர்களுக்கு இருக்கவேண்டிய சமூகப்ப பிரக்ஞையின் பால் மிகுந்த சிரத்தை காட்டி தனது பணிகளை சலீம் முன்னெடுத்து வந்திருக்கிறார்.
பிரதானமாக அம்பாறை மாவட்டத்தை தனது களமாகக் கொண்டு செயற்பட்டு வந்த போதிலும், ஊடகவியலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக குரல்கொடுக்கும் பல்வேறு அமைப்புக்களில் முக்கிய பங்கை வகித்த காரணத்தால் கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் வடமாகாணம், மலையகம் மற்றும் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தமிழ்பேசும் ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகுந்த நட்புரிமை கொண்டவராக சலீம் விளங்குகிறார்.
முஸ்லிம் மீடியா ஃபோரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆகியவற்றின் தாபக உறுப்பினரான சலீம், கிழக்கிலங்கை செய்தியாளர்கள் சங்கம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம், தென்கிழக்கிலங்கை செய்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்தார். 15 வருடங்களாக நிந்தவூர் மத்தியஸ்த சபையின் உறுப்பினராக இருந்துவரும் அவர் தற்போது நிந்தவூர் கலை இலக்கியப் பேரவையின் உப தலைவராக செயற்படுகின்றார்.
சலீமின் பத்திரிகைத்துறை சேவைக்காக அவர் பல்வேறு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். கலாபூசணம் விருது (2008), இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து வருடாந்தம் வழங்கும் வாழ்நாள் சாதனயாளர் விருது (2017), கல்முனை மாநகர சபையின் ஊடக முதுசம் பட்டம் என்பவை அவருக்கு கிடைத்த மிகவும் குறிப்பிடத்தக்க விருதுகள்.
பத்திரிகைத்துறையில் சலீம் 50 வருடங்களைப் பூர்த்திசெய்ததை முன்னிட்டு சில வருடங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் விமரிசையாகப் பெருவிழா எடுத்து அவரைக் கௌரவித்ததுடன் ‘பொன்விழாக்காணும் சலீம் ‘ என்ற சிறப்பு மலரையும் வெளியிட்டது. அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி அவரைக் கௌரவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அந்த விழாவில் தமிழ்,முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பலரும் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களும் சமூகப்பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அது தனது பத்திரிகைத்துறை வாழ்வில் சலீம் செய்த பெறுமதியான பங்களிப்புகளுக்காக சமூகம் அவர் மீது கொண்டிருந்த அபிமானத்தின் சான்றாக அமைந்தது.
சலீம் போன்ற மிகவும் நீண்டகால பிராந்திய செய்தியாளர்களின் அனுபவங்கள் இன்றைய இளம் தலைமுறை ஊடகவியலார்களுக்கு முன்னுதாரணமாக அமையக்கூடியவை. இன்னும் மூன்று வருடங்களில் சலீமின் பத்திரிகைத்துறை வாழ்வு ஆறு தசாப்தங்களைப் பூர்த்திசெய்யும். இந்த நீண்டகால அனுபவங்களை அவர் எழுதி நூல் வடிவில் கொண்டுவரவேண்டும். இது அவரது 75 வது பிறந்த தினத்தில் நான் முன்வைக்கும் கோரிக்கையாகும்.
வடபகுதியில் இன்று இருக்கக்கூடிய மிகவும் மூத்த பிராந்திய பத்திரிகையாளரான வடமராட்சி புலோலி சி. தில்லைநாதனின் 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த ஜூனில் இதே கோரிக்கையை நான் முன்வைத்தேன்.
இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையாளர்களிடம் பெரும்பாலும் காணப்படும் ஒரு முக்கியமான குறைபாடு அவர்கள் தங்களது சேவைக்கால அனுபவங்களின் ஊடாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் அரசியல்,சமூக நிகழ்வுப்போக்குகளை வரலாற்றுப் பதிவாக எழுதுவதில் அக்கறை காட்டுவதில்லை என்பதாகும். எமது நண்பர் அமரர் வவுனியா மாணிக்கவாசகம் இதில் விதிவிலக்காக நடந்துகொண்ட மூத்த பத்திரிகையாளர்களுக்கு அண்மைய உதாரணமாகும்.
இன்றைய செய்தி நாளைய வரலாற்றின் அரை குறையான முதல் வரைவு என்று சொல்வார்கள். அதனால் தான் மூத்த ஊடகவியலாளர்களைப் பற்றி எழுதக்கிடைக்கும் சந்தர்ப்பங்களில் இந்த கோரிக்கையை முன்வைப்பதற்கு நான் தவறுவதில்லை.
இறுதியாக ஒரு தனிப்பட்ட குறிப்பு. எனக்கும் சலீமுக்கும் இடையிலான நட்பு கால் நூற்றாண்டு்க்கும் அதிகமான நீட்சி கொண்டதாகும். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தினக்குரல் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் செய்தி ஆசிரியர் என்ற வகையில் நான் கிழக்கு மாகாணத்தின் பிரதேசங்களுக்கு செய்தியாளர்களைத் தேடிக்கொண்டிருந்த போது எனக்கு அறிமுகப்படுத்தப் பட்டவர்களில் திருகோணமலையின் மூத்த பத்திரிகையாளர் சின்னையா குருநாதனும் அம்பாறை மாவட்டத்தின் சலீமும் மட்டக்களப்பின் சண். தவராசாவும் முக்கியமானவர்கள்.
அவர்கள் தினக்குரலின் பிராந்தியச் செய்தியாளர்களாக பணியாற்ற முன்வந்ததுடன் மாத்திரம் நின்றுவிடவில்லை, பல்வேறு பகுதிகளில் செய்தியாளர்களாக நியமிக்கப்படக்கூடியவர்களுடன் எனக்கு தொடர்புகளை ஏற்படுத்தியும் தந்தார்கள். அவர்களது உதவிகள் விரிவான பிராந்தியச் செய்தியாளர்கள் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி புதிய பத்திரிகையை குறுகிய காலத்திற்குள் பரந்தளவு வாசகர்கள் மத்தியில் கொண்டுசெல்ல எமக்கு உதவியது.
அது விடயத்தில் சலீமின் பங்களிப்பு என்றென்றைக்கும் மறக்க முடியாதது. முதலில் அவர் முழு அம்பாறை மாவட்டத்துக்குமான தினக்குரல் செய்தியாளராக இருந்துகொண்டு பின்னர் அந்த மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செய்தியாளர்களை தேடித்தந்தார். தினக்குரலின் ஆரம்பக் கட்ட வளர்ச்சியில் ஒரு பிராந்தியச் செய்தியாளர் என்ற வகையில் சலீமின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
நண்பர் சலீமுக்கு மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு அவரது பத்திரிகைத்துறைப் பணி தொடர வேண்டுகிறேன். மூத்த பத்திரிகையாளர்களை வாழும்போதே வாழ்த்துவோம்.