அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியாக சேவையாற்றி வந்த நிலையில் பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மஜீத் பொலிஸ் சேவையில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார்.
தனது கடமையினை சமூக சேவையுடன் கூடிய சிந்தனையுடனும் மக்களின் நல்லிணக்க முயற்சியுடனும் மேற்கொண்டமையினால் இவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் மக்கள் இவரை மதித்து கௌரவிக்கின்றனர்.
சம்மாந்துறை பிரதேசத்தினை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இஸ்மாலெப்பை மீராசாஹிப், சின்ன லெப்பை ஆசியா உம்மா தம்பதியருக்கு 14.07.1963ஆம் ஆண்டு புதல்வராய்ப் பிறந்தார். ஆரம்ப காலம் முதல் திறமையுடனும் சமூக சிந்தனையுடனும் இவர் செயற்படத் தொடங்கினார். இவர் தனது கல்வியை சம்மாந்துறை அல்-மர்ஜான் தேசிய பாடசாலையில் மேற்கொண்டதுடன் 1985ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டார்.
பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட இவர், தனது சேவைப்பயிற்சியை மஹியங்கனை இராணுவ பயிற்சிக் கல்லூரியில் நிறைவு செய்ததுடன், கல்குடா பொலிஸ் நிலையத்தில் தனது முதலாவது நியமனத்தைப் பெற்றுக் கொண்டு சேவையினைத் ஆரம்பித்தார். கொழும்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்து கொண்டு தனது சேவையைத் தொடர்ந்தார்.
1994 முதல் 2000ஆம் ஆண்டு வரை விசேட அதிரடிப்படையில் இணைக்கப்பட்டு, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் மல்வத்தை விசேட அதிரடிப்படை முகாம்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றியுள்ளார். மீண்டும் 2000ஆம் ஆண்டு முதல் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
பெருகி வரும் போதை வஸ்த்துப் பாவனையினை கட்டுப் படுத்தும் நோக்கில் பல்வேறான பகீரதப் பிரயத்தனங்களை இவர் மேற்கொண்டார். பல்வேறு விழிப்புணர்வுகளை இளைஞர்கள் மத்தியில் இவர் மேற்கொண்டுள்ளார். பாடசாலைகள், சமூக அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு போதை ஒழிப்பு செயற்பாடுகளுக்கு தனது பூரண ஒத்துழைப்புகளை நல்கி சதா செயற்பட்டதனை இங்கு சுட்டிக்காட்டப்படவல்லது.
இவர் கடமையாற்றிய பிரதேசங்களில் பொதுமக்களுடன் சிநேகபூர்வமாக நட்புறவினை பேணி வந்துள்ளார். இதனால் பல குற்றச் செயல்களை மக்கள் மத்தியில் இருந்து இனங்காண்பதற்கு துணையாய் இருந்தது. இவ்வாறு இனங்காணப்படும் சமூக மட்டக் குற்றச் செயல்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை இனங்காண்பதற்கும் இந்நட்புறவு பெரிதும் துணை நின்றது என்றால் அது மிகையில்லை.
இவரின் கடமைக்கு மேலதிகமாக சமூக நன்நோக்குடன் செயற்பட்டதனாலேயே இன்று வரை சமூக மட்டத்தில் நற்பெயரோடு பேசப்பட்டு வருகின்றார். குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களின் அடிப்படை வசதிகளை கட்டியெழுப்பும் நோக்குடன் இவர் செயற்பட்டார். மக்களின் நலனுக்காக மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, விளையாட்டு, கலை, கலாசார விடயங்களை விருத்தி செய்வதற்காக துறைசார் அதிகாரிகள், தனவந்தவர்கள், முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டு இரவு பகல் பாராது தன்னாலான பல்வேறு உதவிகளை இவர் மேற்கொண்டுள்ளார்.
இவரின் 34 வருடன சேவையினைப் பாராட்டி தேசிய ஐக்கிய நல்லிணக்க ஊடகவியலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா அண்மையில் அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவரும், முன்னாள் பிரதேச சபை உதவித் தவிசாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபர் எம்.எஸ்.எம்.சம்சுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.ஜெயபத்ம, பிரதேச செயலாளர்களான எம்.ஏ.சி.அஹமட் சாபிர், எஸ்.எல்.எம்.ஹனீபா, எம்.ஐ.எம்.பிரினாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், ஓய்வு நிலை உதவி பொலிஸ் அத்திட்சகர் ஏ.வாஹித், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டபள்யு.எஸ்.ஏ.சதாத், அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஜுனைதீன், முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர்களான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், எம்.ஏ.றாசீக் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதன்போது அதிதிகளாய்க் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியாக சேவையாற்றி வந்த நிலையில், ஓய்வு பெற்ற எம்.எஸ்.அப்துல் மஜீத் பொதுமக்களுடன் சினேக பூர்வமான உறவினைப் பேணி வந்தார். தனது 34 வருட சேவையினை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்டு மக்கள் மத்தியிலும் பொலிஸ் திணைக்களத்திலும் நற்பெறரைப் பெற்றுக் கொண்டார்.
இவரது சேவையினைப் பாராட்டும் வகையில் தேசிய ஐக்கிய நல்லிணக்க ஊடகவியலாளர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சேவை நலன் பாராட்டு விழாவின்போது அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது நிகழ்வின் அதிதிகளாய்க் கலந்து கொண்ட நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.ஜெயபத்ம ஆகியோரின் சேவையினைப் பாராட்டியும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எம்.ஏ.றமீஸ்