பாகிஸ்தானின் 58வது பாதுகாப்பு தின நிகழ்வு

(அஷ்ரப் ஏ சமத்)

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 7  கொழும்பு ஷங்கரிலா ஹோட்டலில் பாகிஸ்தானின் 58 வது பாதுகாப்பு தினத்தை கொண்டாடும் வகையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் வரவேற்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு நிலை ) ஜிடிஎச் கமல் குணரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

 1965 இல் தாய்நாட்டைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் தியாகங்களை பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர், கர்னல் முஹம்மது ஃபரூக் புக்டி சுட்டிக்காட்டியதோடு பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் ஆயுதப்படைகளின் பங்கையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் ஃபரூக் பர்கி வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு செப்டம்பர் 6 , பாகிஸ்தானின் பாதுகாப்பு தினம் பாகிஸ்தான் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது, ஏனெனில் 1965 ஆம் ஆண்டு இந்த நாளில்தான், வீரம் மிக்க ஆயுதப்படைகளும் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றிணைந்து எதிரிகளை முறியடித்தன என்றும் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் ஆயுதப் படைகளின் வீரம் நிறைந்த ஆண்,பெண் தியாகிகள் (ஷுஹாதா) மற்றும் போராளிகளுக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தினார்.

பாகிஸ்தான்-இலங்கை நட்புறவு சம்பந்தமாக கருத்துத்தெரிவித்த  உயர்ஸ்தானிகர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும், களங்களிலும் வலுப்பெற்றுள்ளன என்பதை எடுத்துரைத்தார். இலங்கை ஆயுதப்படையைச் சேர்ந்த 7000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பாகிஸ்தான் ஆயுதப் படைகளால் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், இலங்கை ஆயுதப்படைகளுக்கு தேவையான நேரத்தில் இராணுவ உபகரணங்களை வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இரு நாடுகளுக்கிடையேயான உறவு நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் உண்மையான நண்பனாக பாகிஸ்தான் இருப்பதாக ஜெனரல் (ஓய்வு நிலை) ஜி.டி.எச்.கமல் குணரத்ன தெரிவித்ததோடு உலகின் மிக கொடூரமான பயங்கரவாத அமைப்பை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் நிபந்தனையற்ற ஆதரவை இலங்கைக்கு வழங்கியதை அவர் நினைவு கூர்ந்தார். இலங்கை அரசாங்கமும் மக்களும் பாகிஸ்தான் வழங்கிய உதவிகளை ஒரு போதும் மறக்கமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

தாய்நாட்டைக் காக்க பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் தியாகங்களை எடுத்துக்காட்டும் சிறு ஆவணப்படம் ஒன்றும் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் பாதுகாப்பு தினத்தை நினைவுகூரும் கேக் ஒன்றும் பிரதம விருந்தினர், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைத் தலைவர், முப்படைகளின் தளபதிகள், உயர், டிஜி எஸ்ஐஎஸ், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரால் கூட்டாக வெட்டப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவீந்திர சில்வா, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஆர்.ஏ.யு.பி ராஜபக்ஷ, டி.ஜி. எஸ்.ஐ.எஸ். , நட்பு நாடுகளின் தூதுவர்கள்/ உயர் ஸ்தானிகர்கள், இலங்கை ஆயுதப் படைகளின் மூத்த மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள்/ இணைப்பாளர்கள், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான விருந்தினர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.