ஆறாம் நிலம் : நினைவுகொள் வாழ்வின் ‘அகமும் புறமும்’  

ஆறாம் நிலம் : நினைவுகொள் வாழ்வின் ‘அகமும் புறமும்’

Bosnia and Herzegovina  போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதிக்கான போராட்டம் பல தரப்பிலும்  வலுவான ஒழுங்கமைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. 2014களில், போரின் வலியை  & Remember  me &  வெளிச்சம் போட்டுக் காட்டியது. இயக்குனர் Azra Hodzic  அவர்களால்  உலகுக்குத் தரப்பட்ட  ஒரு குறுந்திரைப்படம் சர்வதேச கவனத்தைப் பெற்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் உறவுகளின் துயரங்களை வெளிக்கொணர உதவியது. ஆறாம் நிலம், யாழ் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டபோது, அதைப்பார்த்த எனக்கு இயக்குனர் Azra Hodzic இன் நினைவுகள் ந்தன.  

இயக்குனர் Azra Hodzic  அவர்களின் படைப்பான & Remember  Me & ஒரு புள்ளியை  நோக்கிப்படைக்கப்பட்டது.  அதுபோல், The  Sixth  Land ( ஆறாம் நிலம்) படைப்பும் ஒத்த புள்ளியை நோக்கியே செல்கிறது. அது  நீதிக்கான ஒரு குரலை உரத்துப் பறைசாற்றுவதே.       

30 August 2023 இன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும்.  நீதி கோரி வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இன்றுடன் 2380  நாட்களைக் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம்  அழுத்தம் தரும் வகையில் மாறவில்லை. சக்தி மிக்க, வலுவான மக்கள் திரளாக இணைந்த, ஒரு பரந்துபட்ட போராட்டமாக மாற,  பிரச்சனை பற்றிய வலுவான படைப்புக்கள் தேவை. படைப்பாளிகளும் கலைஞர்களும்  அது நோக்கி வலுவாகத் திரள வேண்டிய தருணம் கனிகிறது என்னும்  சூழ்நிலையில்,  ஆனந்த ரமணனின் ஆறாம் நிலம் ஒரு சிறப்பான  வருகை எனலாம்.  

தொல்காப்பியம்  சொல்லும் அகம்மற்றும் & புறம்&‘  என்பவை; நினைவுகொள் காலத்தில் மனித பாதுகாப்பின்மை, போர்க்கள அழிவுகள், போர் விளைவித்த அவலங்களின் அதிர்வுகளை வெளிச்சம் காட்டும் நினைவு  இலக்கியங்களாகும்    

அகத்தையும்  புறத்தையும்சினிமா மொழியில் பேசும் ஒரு வடிவமாக ஆறாம் நிலம் எம்முன் தரப்பட்டிருக்கிறது.. உறைந்து போயிருக்கும் எம்மையும், எமது நினைவுகளையும்   கலைக்கிறது; கலந்துரையாடுகிறது. மிக முக்கியமாக, எமது அடையாளத்தைத் தொட்டுணரச் செய்கிறது.

ஆறாம் நிலம்  தரும்  தரிசனம் என்பது நினைவு கொள் வாழ்வின்  அகமும் புறமும் பற்றிய ஒரு வரைபடமாகும். புலப்பெயர்வு  பற்றிய பதிவுகள் தரும் துயரங்கள் மிக ஆழமானவை. அவை கசப்பான காலத் துயர்கள். இடப்பெயர்வு தந்த வலி மற்றும் அதன் அதிர்வுகள், புலம்பெயர் வாழ்வின் ஆறாம் திணை (Sixth  LAND) எனலாம். புலப்பெயர் வாழ்வு தரும் அனுபவங்கள் கூட ஆறாம் திணையின் உள்ளடக்கமே.  

ஆறாம் திணையாக வரும் அதே காலத்தில், போர் விதைத்து, செதுக்கி வடிவமைத்தவர்களின் வாழ்வின் மையம்  என்பது எமது காலத் துயரினால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாள  மையமாகும். (Identity of Victimhood)

இந்த  அடையாளத்தை எமது ஏழாம் திணையாகக் (Seventh Land)  கொள்ளமுடியும்.  ரமணனின் ஆறாம் நிலம் (The Sixth  Land )   ஊடாக, உண்மையின் திரை வடிவமாக உதித்தெழுவது ஆறாம் திணை அதிர்வு தந்த   ஏழாம் திணையின் வடிவமே. ஆகவே, ‘ஆறாம் நிலம்திரைப்படம் தரும் பொருள் என்பது “ஆறாம் திணையும் ஏழாம் திணையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல், திரைவடிவமாக பிணைக்கப்பட்டுள்ளது. மிக ஆழமாக!

90  நிமிடங்களில் , இத்திரைப்படம் மிக முக்கியமாக மூன்று விடயங்களை  எம்முன் கொண்டு வருகின்றது. ூன்று கருக்களைச் சமாந்திரமாக,  ஒரே பாதையில் மையத்தை விட்டு விலகாத விதத்தில் திரைச் சரடில் இணைத்து அசைக்கிறது.

1) . கண்ணிவெடி  அகற்றும் சேவையாளர்கள் தரும் களம், அதன் தளம் தரும் ஆபத்துகள், நெருக்கடிகள் மற்றும் மனித மனஅசைவோட்டங்கள் என்பவை திரைப்படத்தின் ஈர்ப்பைத் தரும் கதைக் களமாக இருக்கின்றன. கண்ணி வெடி அகற்றும் மனிதர்களின் ஆபத்து மிக்க சேவை எம்மை உறையவைக்கிறது. ரமணனும் இவர்களில் ஒருவரே. ஏனெனில், திரைப்படம் தரும் கரு இன்றைய காலகட்டத்தில் ஒரு ஆபத்தான , தெரிந்து எடுக்கபட்ட மரணப் பாதையாகும்.

2. ஒரு குடும்பத்தின் வலி, காணாமற் போன ஒரு கணவனின், தந்தையின் சோகம். மனித பிணைப்பின் இறுக்கம், இழப்பு. கதையின் காலத்துயர் என்பது இழப்பை விட  இழப்பின் நிலையறியாது தவிக்கும் தவிப்பு, அலைச்சல், கோபம் மற்றும் திசை  அறியாது  அலறும் ஒரு சமூகத்தின் ஒரு முகமாக ஒரு குடும்பத்தின் ஊடாக நகர்த்தப்படுவது. கிழிக்கப்பட்ட வாழை இலையாக மாறும் ஒரு சமூகத்தின் இன்றைய வாழ்வு நிலை.  திரை மொழி, சில இடங்களில் இடறினாலும்  காத்திரமான  பல இடங்கள் கதையின் முழுமையைத் தருகிறது.

3.ஒரு சமூகத்தின் முரண் நிலை மறு பக்கங்கள் – குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களின் மீதான பாலியல் அழுத்தங்கள். அரசின் அதிகார முகங்கள் தரும் அழுத்தங்கள் இத்திரை  வழி வெளிவருகிறது. அத்துடன், நெருக்கடியில் அசைபோடும் மனித மனங்களின் ஆசைகள், காதல், மற்றும் அதன் மீதான இருப்பும் ஈர்ப்பும்.

படத்தில் வரும் மிக முக்கியமான வினா & அப்பா எப்ப வருவார் &. இது ஒரு குடும்பத்தின் தேடல் மட்டும் அல்ல; குறிப்பாக, தமிழ் சமூகத்தின் கேள்வியும் கூட. மிகவும் துயரமான அவலம் காணாமல் போனவரின் குடும்பத்தின் துயரம் தான். அறியவரப்பட்ட மறைவும் மரணமும் துயரிற்கு ுற்றுப்புள்ளிகளை வைத்து வாழ்க்கையினை கடந்து போகச் செய்துவிடும்; ஆனால், காணாமல் போனவரின் நிலை வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் ஊசலாடும் வாழ்வு; கழுவேற்றப்பட்டவரின் நிலை.

காணாமல் ஆக்கப்பட்டோர் மீதான சமூக வெளிச்சம் மிகக் குறைவடைந்து செல்லும் நிலையில், ‘ஆறாம் நிலம்‘  தரும் பெருஞ்சொல் என்பது  “தனிமனிதர்களினின் சமூகப் பொறுப்புநிலை பற்றிய ஒரு அசைவியக்க பார்வைதான்”.  காணாமல் ஆக்கப்பட்டோர் விளிம்புநிலை மக்களாக சிறுபான்மையாயினமாக இருக்கையில் துயர்தருநிலை மிகவும் அதிகமாகும். அரச அதிகாரமும் சமூக அதிகாரமும் ஒன்றிணைந்து அதிக வலியைப்  பாதிக்கப்பட்டோர் மீது செலுத்தும். சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு கிணற்றில் போட்ட கல்லாக  மாறிவிடும்; காலப்போக்கில், கரைந்தும் விடக்கூடும். ஆறாம் நிலம் கூட்டுச் சமூகப்பொறுப்புப் பற்றி எதுவும் சொல்ல முனையவில்லையென்றாலும் பார்ப்பவர்கள் மனதில் ஒரு கீறலைப் போடுகிறது. தனிமனித அசைவிலிருந்து தோன்றும் பேரசைவாய்… ஒரு நீர்க்குமுழியின் வெடிப்பிலிருந்து உருவாகும் பேரலைபோல்… இது தான் ரமணனனின் எதிர்பார்ப்பு… அதுவே அவரின் படைப்பாக்க வெற்றியும் கூட.   

வை. ஜெயமுருகன்