போதைப்பொருள் வியாபாரம் காரணமாக, நம் நாட்டின் குழந்தைகள் மற்றும் பாடசாலை கட்டமைப்பு மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளதாகவும்,ஈஸி கேஷ் போன்ற முறைகள் மூலம் போதைப்பொருள் அரக்கன் பாடசாலை கட்டமைப்பு மற்றும் பாடசாலை மாணவர்களை விழுங்கிவிட்டதாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாடசாலைகளுக்கு செல்லும்போது பெற்றோர்கள் கூறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எனவே,பாடசாலை மாணவர்களிடமிருந்து போதைப்பொருளை அகற்றுவதற்கான அவசர வேலைத்திட்டம் அவசியம் என்றும், பிள்ளைகளை மையமாகக் கொண்ட போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிரான கடுமையான சட்ட கட்டமைப்பு மற்றும் வேலைத்திட்டம் தேவை என்றும்,பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கு தனியான படையொன்று உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அண்மையில் (25) சிறுவர்களுக்கான பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
நம் நாட்டில் குழந்தைகளின் உரிமைகள் எந்த அளவுக்கு சட்ட விதிகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், குழந்தைகளின் உரிமைகளுக்கு மேலதிகமாக,அடிப்படை உரிமைகளுடன் தாய்மார்களின் உரிமைகள் என்ற தனி அலகையும் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தாய்மார்களும் பிள்ளைகளும் எமது சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராக இருப்பதால் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அவர்களை அடிப்படை உரிமைகளில் உள்வாங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.