(வி.ரி.சகாதேவராஜா)இரண்டு நூற்றாண்டு காலமாக மலையக மக்கள் பல துன்பங்களையும் துயரங்களையும் சவால்களையும் சந்தித்து வந்திருக்கின்றார்கள். இன்னும் அவர்களது வாழ்வியலுக்கான வாழ்விடத்திற்கான உரிமை என்பது பேசு பொருளாகவே இருக்கின்றது.
இவ்வாறு மனித அபிவிருத்தி தாபனத்தின் ஸ்தாபகர் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி பி . சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
அண்மையில் மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் இடம்பெற்ற வாழிடத்திற்கானஉரிமை மீறல் சம்பவம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
இன்று மலையகம் 200 வருட கால வரலாறு பற்றி பேசுகின்றோம் .கொண்டாடுகின்றோம். பெருமைப் படுகிறோம்.ஆனால் இன்னும் அந்த மக்களுக்கான மனித உரிமைகள் வாழ்விட உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
ரத்வத்தை தோட்டத்தில் ஏழை குடிமகனின் குடிசை உதவி முகாமையாளரால் பேடித்தனமாக அடித்து நொறுக்கப்பட்டது.
அங்கு எமது பிரதிநிதி திரு நடராஜா அவர்கள் நேரடியாக சென்ற பொழுது அவர்கள் அழுதழுது சோக சம்பவத்தை கூறியுள்ளனர்.
யானை உடைத்தது போன்று மிலேச்சத்தனமாக மக்களது உடைமைகளை உடைத்து இருக்கின்றார்கள்.இவர்களுக்கு அடித்து உடைக்க எந்த உரிமையும் இல்லை.
இந்த வரலாறு தொடரக்கூடாது. அவர்களது வீட்டில் ஒரு நீடிப்பு செய்தால் அதனை போலீசில் முறையிட்டு தீர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து இப்படி அடித்து உடைப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
எதிர்காலத்திலே சட்ட ரீதியாக இதனை அணுக வேண்டும். ஒன்று அரசியல் ரீதியாக.. இரண்டு சட்டரீதியாக ..
இரண்டும் செய்தால் தான் மலையகம் 200 என்பது அர்த்தப்படும். இது அரசியல்வாதிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் சமர்ப்பணம் .
என்றார்.