மட்டக்களப்பில் முன்னுதாரனமாக செயற்பட்ட இந்து ஆலயங்கள்!!

 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் இன்று (24) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த யுத்த கால சூழ்நிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்ததனால் பரவலாக பின்தங்கிய பகுதிகளில் கைவிடப்பட்டும் கவனிப்பாரற்று அழிவுற்ற நிலையிலும் பல சிறிய ஆலயங்கள் இருப்பது கவனத்தில் கொள்ளப்பட்டு அவற்றின் தொன்மைகள் அழிந்து போகா வண்ணம் மீள் புனரமைப்பு செய்யப்பட்டு வழிபாட்டிற்குரிய வகையில் அவற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் உணரப்பட்ட நிலையில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டதனைத் தொடர்ந்து இன்று அவ்வாறு இனங்காணப்பட்ட 4 ஆலயங்களை பராமரிக்கும் பொறுப்பு மாவட்டத்தில் உள்ள வசதி படைத்த ஆலயங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கெவிளியாமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினை புனர்நிர்மானம் செய்து பராமரிப்பு செய்வதற்கான பொறுப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் பேராலய நிருவாகத்திற்கும், புனானை இலக்குபுல் விநாயகர் ஆலயத்தினை புனர்நிர்மானம் செய்து பராமரிப்பு செய்வதற்கான பொறுப்பினை களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய நிருவாகத்திற்கும், கச்சக்கொடி சுவாமிமலை ஸ்ரீ பிள்ளையார் முருகன் ஆலயத்தினை புனர்நிர்மானம் செய்து பராமரிப்பு செய்வதற்கான பொறுப்பினை தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கும், மாகூப்பை, வெலிக்கந்தை வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தினை புனர்நிர்மானம் செய்து பராமரிப்பு செய்வதற்கான பொறுப்பினை சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலயத்தின் நிருவாகத்தினருக்கும் மாவட்ட அரசாங்க அதிபரினால் உத்தியோக பூர்வமாக பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

இத்தெய்வீக திருப்பணியில் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து கொண்டு இப்புனித கைங்கரியத்தை செய்வதற்கு தாமாகவே முன்வந்தமையையிட்டு தமது நன்றியையும் பாராட்டுக்களையும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் சார்பில் தெரிவித்து கொள்வதாக நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பூ.பிரசாந்தன் இதன்போது தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம், பட்டிப்பளை, கிரான் மற்றும் மண்முனை தென் எருவில்பற்று ஆகிய பிரதேச செயலகங்களில் கலாசார உத்தியோகத்தர்கள், ஆலங்களின் நிருவாகிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.